டீன் ஜோன்ஸ் நினைவு நாள்: ஒருநாள் கிரிக்கெட்டுக்குப் புதிய வண்ணம் சேர்த்த அதிரடி மன்னன்

அதிரடியான ஆட்டம் மட்டும் டீன் ஜோன்ஸின் அடையாளமல்ல. ஓடி ரன்கள் எடுப்பதில் கில்லியாக இருந்தார்...
டீன் ஜோன்ஸ் நினைவு நாள்: ஒருநாள் கிரிக்கெட்டுக்குப் புதிய வண்ணம் சேர்த்த அதிரடி மன்னன்

2020 இதே நாளில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸின் மறைந்தது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சென்னை ரசிகர்களுக்கு டீன் ஜோன்ஸ் மீதான பிணைப்பு அதிகம். 1986-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆட்டம் டை ஆகி கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்தது. இந்த ஆட்டத்தில் இளம் வீரராகக் களமிறங்கி வெயில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை வெகு சிறப்பாக எதிர்கொண்டு இரட்டைச் சதமெடுத்தார் டீன் ஜோன்ஸ்.

1980களின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஈர்த்தவர், டீன் ஜோன்ஸ். இவருடைய ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட்டின் அணுகுமுறையை மாற்றியது என்றுகூடச் சொல்லலாம். 1987-ல் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். 1989 முதல் 1992 வரை ஒருநாள் கிரிக்கெட்டின் நெ.1 பேட்ஸ்மேனாக விளங்கினார்.

ஒருநாள் கிரிக்கெட்டை வடிவமைத்தவர்கள் என்று லாய்ட், கார்னர், டீன் ஜோன்ஸ், ஜெயசூர்யா, சக்லைன் முஷ்டாக், மியாண்டட் போன்றோரைச் சொல்வார்கள். அதிரடியான ஆட்டம் மட்டும் டீன் ஜோன்ஸின் அடையாளமல்ல. ஓடி ரன்கள் எடுப்பதில் கில்லியாக இருந்தார். அதேபோல ஃபீல்டிங்கிலும் தனக்கான அடையாளத்தைப் பெற்றார். 

வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளிலும் முன்னேறி வந்து அடிப்பார். இதனால் விரைவாக ரன்கள் எடுப்பதும் அவருக்குச் சுலபமாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் கிரீஸை விட்டு முன்னேறி பந்தை அடிப்பதும் வேகவேகமாக ஓடுவதும் அப்போது அனைவரும் ஆச்சர்யத்தை அளித்தது. ரன்களை வேகமாக ஓடி எடுப்பார் என்பதால் ஃபீல்டர்கள் அதைத் தடுப்பதற்கு உஷாராக இருக்கும்போது அதிரடியாக பவுண்டரிகள் அடிப்பார். டீன் ஜோன்ஸ் போன்ற சுறுசுறுப்பான வீரரால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. 1987-ல் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரராக இருந்த டீன் ஜோன்ஸ், அடுத்த தலைமுறை வீரர்கள் பெரிய அளவில் கனவு காண காரணமாக அமைந்தார்.

டீன் ஜோன்ஸுடன் இணைந்து விளையாடிய மைக் விட்னி ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார்: ஃபீல்டர் எந்தக் கையில் பந்தை த்ரோ செய்வார்கள், எந்த வீரர் ஃபீல்டிங்கில் பலவீனமாக இருப்பார் போன்ற நுட்பமான தகவல்களையெல்லாம் தெரிந்து வைத்திருப்பார். ரன்கள் ஓடுவது குறித்து சரியாகக் கணிப்பார் என்றார்.

1984-ல் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் டீன் ஜோன்ஸ். அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7-ம் நிலை வீரராகக் களமிறங்கி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அடுத்த பத்து வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக மாறினார். இவருடைய சுறுசுறுப்பான ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட்டுக்குப் புதிய வண்ணத்தை அளித்தது. (ஒருநாள் கிரிக்கெட்டில் நான் தான் முதல்முறையாக சன் கிளாஸ் அணிந்தேன் என ஒருமுறை அவர் கூறியுள்ளார்.) 

டி20யில் இன்று நாம் பார்க்கும் அதிரடியான ஆட்டத்தை 80களில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தியவர் டீன் ஜோன்ஸ். கேப்டன் ஆலன் பார்டர், டீன் ஜோன்ஸூக்கு முழுச் சுதந்திரம் அளித்ததால் நினைத்தபடி விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஈடுபடும் வீரர்கள் உடற்தகுதி, ஃபீல்டிங், நன்கு ஓடி ரன்கள் எடுக்கும் தன்மை ஆகிய திறமைகள் இருக்கவேண்டும் என விரும்பினார் பார்டர். இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து அதற்கான முன்னுதாரணமாகவும் இருந்தார் டீன் ஜோன்ஸ். 1987 உலகக் கோப்பையில் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். 

ஆஸ்திரேலிய அணியின் மகத்தான வீரரான ரிக்கி பாண்டிங், டீன் ஜோன்ஸ் பற்றி ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார்: கிரிக்கெட்டின் மீது எனக்குக் காதல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், டீன் ஜோன்ஸ். அவருடைய ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. ஒரு தலைமுறைக்கு முன்பாக கிரிக்கெட் விளையாட வந்தவர் என அவரைப் பற்றி கூறுவேன். தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் புரட்சி ஏற்படுத்தினார். அவரைப் போல விளையாட வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன் என்றார்.

சென்னை டை டெஸ்ட் ஆட்டத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டார் ஜோன்ஸ். 15 முறை வாந்தி எடுத்து, தளர்ந்து போனார். ஆனால் 42 டிகிரி சென்னை வெயிலில், பலமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள வலுவான மனநிலை இருந்தால் போதும் என முடிவெடுத்தார் ஜோன்ஸ். அதுதான் இந்தியாவில் அவர் விளையாடும் முதல் டெஸ்ட் ஆட்டம். சென்னையில் டெஸ்ட் விளையாடுவது இமயமலையைத் தொடுவதற்குச் சமம் என பல பேட்டிகளில் கூறியுள்ளார். அந்த டெஸ்டில், அனுபவத்தில் இந்திய அணி மிகவும் பலம் பொருந்தியாக இருந்தது. (அவர்கள் 500+டெஸ்டுகள், நாங்கள் 140 தான் - டீன் ஜோன்ஸ்). 

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் 3-ம் நிலை வீரராகக் களமிறங்கி, முடியாத நிலையிலும் 210 ரன்கள் எடுத்த பிறகே ஆட்டமிழந்தார். இதன்பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட டீன் ஜோன்ஸுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த நாள் வழக்கம்போல விளையாட வந்துவிட்டார். 2-வது இன்னிங்ஸில் 24 ரன்கள் எடுத்தார். சென்னை டெஸ்ட் டை ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. டீன் ஜோன்ஸ், கபில் தேவ் என இருவருக்கும் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

சென்னை டெஸ்டில் அட்டகாசம் செய்தபிறகு ஆஷஸ் தொடரில் விளையாடினார் டீன் ஜோன்ஸ். ஆஸ்திரேலியா தோற்ற அந்த ஆஷஸ் தொடரில் 600 ரன்கள் எடுத்தார். சென்னை டெஸ்ட் அளித்த நம்பிக்கையால் தன்னால் எங்கும் எதிலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com