ரசிகர்கள் கவலை: டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகல்?
காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
28 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இந்நிலையில் சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளிவரவில்லையென்றாலும் இந்தத் தகவல் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல வேண்டுமென்றால் பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில் அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவைத் தரும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

