தீப்தி சர்மா மீதான இங்கிலாந்தின் விமர்சனம்: ஹர்ஷா போக்ளே வேதனை!

எதைத் தவறு என நினைக்கிறதோ அதை மற்ற கிரிக்கெட் உலகமும் தவறு என எண்ண வேண்டும்...
தீப்தி சர்மா மீதான இங்கிலாந்தின் விமர்சனம்: ஹர்ஷா போக்ளே வேதனை!
Published on
Updated on
2 min read

விதிமுறைப்படி செயல்பட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவை விமர்சனம் செய்யும் இங்கிலாந்து ஊடகங்கள் குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. அவுட் என நடுவர் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறினார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தீப்தி சர்மா மீது தொடர்ந்து வரும் விமர்சனங்கள் குறித்து பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ட்விட்டரில் தெரிவித்ததாவது:

விதிமுறைப்படி விளையாடிய ஒரு பெண் மீது இங்கிலாந்து ஊடகம் தொடர்ந்து கேள்வி எழுப்புவது என்னைத் தொந்தரவு செய்கிறது. அதேசமயம் சட்டத்துக்குப் புறம்பான ஆதாயம் பெற்றவர் மீது ஒரு கேள்வியில்லை. அவர் தொடர்ந்து அந்தத் தவறைச் செய்பவரும் கூட. இது ஒரு கலாசாரம் சார்ந்தது. கிரிக்கெட் உலகைப் பெரும்பாலும் ஆண்டதால் இது தவறு என இங்கிலாந்து நினைக்கிறது. கேள்வி எழுப்பியவர்களிடம் காலனிய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. எனவே இங்கிலாந்து எதைத் தவறு என நினைக்கிறதோ அதை மற்ற கிரிக்கெட் உலகமும் தவறு என எண்ண வேண்டும் என்கிற மனநிலையே நீடிக்கிறது, ஆஸ்திரேலியா போல. நாம் எந்த எல்லை வரை செல்ல வேண்டும் என அவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அவர்கள் கலாசாரத்தில் அது சரியாக இருக்கும், மற்றவர்களுக்கு அப்படி இருக்காது. இங்கிலாந்து என்ன நினைக்கிறதோ அதையே இதர கிரிக்கெட் உலகம் இனிமேலும் செய்யப் போவதில்லை. எனவே என்ன தவறு என்பது தெரிகிறது. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்கள் மோசமானது. ஆனால் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களை அப்படிக் கருத முடியாது. இது கலாசாரம் சார்ந்தது என ஏன் நான் சொல்கிறேன் என்றால் அவர்கள் அப்படித்தான் யோசிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். இது தவறு என அவர்கள் நினைப்பதில்லை. பிரச்னை ஏற்படுகிறது. இதனால் யார் மீது தவறு என்கிற ஆராய்ச்சியில் நாமும் குற்றம் செய்தவர்கள் போல் ஆகிவிடுகிறோம். 

பந்துவீச்சாளர் பக்கமுள்ள பேட்டரை ரன் அவுட் செய்வதை இதர நாடுகள் ஆதரிக்கக் கூடாது என இங்கிலாந்து எண்ணுகிறது. அதுபோல ரன் அவுட் செய்த தீப்தி சர்மா மற்றும் மற்றவர்கள் மீது மோசமான விமர்சனங்களை வைக்கிறார்கள். விதிமுறைப்படி விளையாடுவது எளிதானது. அது கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்குமா என கவலைப்பட வேண்டியதில்லை. அதேபோல நம் கருத்தை அடுத்தவர் மீது திணிக்க வேண்டாம். பந்துவீச்சாளரின் கை உச்சியில் இருக்கும்போது மறுமுனையில் உள்ள பேட்டர், கிரிஸுக்குள் தான் இருக்க வேண்டும் என்கிறது விதிமுறை. அதை மதித்து நடந்தால் கிரிக்கெட் ஆட்டங்கள் அமைதியாக நடைபெறும். சட்டத்தை நீதிபதிகள் செயல்படுத்துவது போல கிரிக்கெட்டிலும் அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் தீப்தி மீதான விமர்சனங்கள் என்னைத் தொந்தரவு செய்கின்றன. விதிமுறைப்படி அவர் விளையாடினார். எனவே அவர் மீதான விமர்சனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com