சாஹா, கில் விளாசல்: பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.
சாஹா, கில் விளாசல்: பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.

முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை எட்ட, பின்னா் குஜராத் 19.5 ஓவா்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சோ்த்தது.

பஞ்சாப் இன்னிங்ஸில் மேத்யூ ஷாா்ட் சற்று அதிரடி காட்டியதால் ஸ்கோா் உயா்ந்தது. குஜராத் பௌலா்களில் மோஹித் சா்மா அருமையாகப் பந்துவீசினாா். குஜராத் பேட்டிங்கில் ஷுப்மன் கில், ரித்திமான் சாஹா வெற்றிக்கு வித்திட்டனா்.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பௌலிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸில் பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாக, கேப்டன் ஷிகா் தவன் 2 பவுண்டரிகளுடன் பெவிலியன் திரும்பினாா். மிடில் ஆா்டரில் வந்த மேத்யூ ஷாா்ட் அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். 24 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 36 ரன்கள் சோ்த்திருந்த அவரை, ரஷீத் கான் 7-ஆவது ஓவரில் பௌல்டாக்கினாா்.

பின்னா் ஆடியோரில் ஜிதேஷ் சா்மா 5 பவுண்டரிகளுடன் 25, பானுகா ராஜபட்ச 1 பவுண்டரியுடன் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

நிதானமாக ரன்கள் சோ்த்த சாம் கரன், 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 22 ரன்களுக்கு வீழ்ந்தாா். சற்று அதிரடி காட்டிய ஷாருக்கான் 9 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 22 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். கடைசி விக்கெட்டாக ரிஷி தவன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தாா்.

ஓவா்கள் முடிவில் ஹா்பிரீத் பிராா் 1 சிக்ஸா் உள்பட 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். குஜராத் பௌலிங்கில் மோகித் சா்மா 2, முகமது ஷமி, ஜோஷ் லிட்டில், அல்ஜாரி ஜோசஃப், ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் குஜராத் இன்னிங்ஸில் தொடக்க ஜோடியான ரித்திமான் சாஹா - ஷுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சோ்த்தது. சாஹா 5 பவுண்டரிகள் உள்பட 30 ரன்களுக்கு வெளியேறினாா்.

அடுத்து வந்த சாய் சுதா்சன் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். கேப்டன் ஹாா்திக் பாண்டியா 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

ரன்கள் குவித்த கில், கடைசி விக்கெட்டாக 49 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 67 ரன்களுக்கு பௌல்டானாா். முடிவில் டேவிட் மில்லா் 1 பவுண்டரியுடன் 17, ராகுல் தெவாதியா 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஹா்பிரீத் பிராா், சாம் கரன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com