இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்காக அவர் 11 டெஸ்ட் போட்டிகள், 70 ஒருநாள் போட்டிகள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 47 பந்துகளில் 86 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். ஓய்வு பெறுவதற்கு முன்னதாக அவரது சிறப்பான ஆட்டம் இதுவாகும்.
தனது ஓய்வு முடிவு குறித்து இன்ஸ்டாகிராமில் அலெக்ஸ் ஹேல்ஸ் பதிவிட்டுள்ளதாவது: அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் எனது நாட்டுக்காக 156 போட்டிகளில் விளையாடியுள்ளதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன். இந்தப் பயணத்தில் எனக்கு நிறைய நினைவுகளும், நண்பர்களும் உள்ளனர். இந்த நினைவுகளும், நண்பர்களும் என் வாழ்நாளின் கடைசி வரை நிலைத்திருக்கும். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என நினைக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அலெக்ஸ் ஹேல்ஸ் 6 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன் 2,419 ரன்கள் குவித்துள்ளார். 75 டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 12 அரை சதங்களுடன் 2,074 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 அரைசதங்களுடன் 573 ரன்கள் குவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.