கடைசி டி20: மேற்கிந்தியத் தீவுகளுக்கு 166 ரன்கள் இலக்கு!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை 165 இழந்து ரன்கள் குவித்துள்ளது.
கடைசி டி20: மேற்கிந்தியத் தீவுகளுக்கு 166 ரன்கள் இலக்கு!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை 165 இழந்து ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். நேற்றையப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை இன்று இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், ஷுப்மன் கில் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரினை சிறிது உயர்த்தியது. இருப்பினும், திலக் வர்மா 27 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்தார் சஞ்சு சாம்சன். அவர் நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. 13 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டிருக்கையில் அவர் ரொமாரியோ ஷெப்பர்டு வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இந்திய அணி ஒருபுறம் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்க, மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். அவர் 45 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் அர்ஷ்தீப் சிங் 8 ரன்களிலும், குல்தீப் ரன் ஏதும் எடுக்காமலும், அக்ஸர் படேல் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்டு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அகில் ஹொசைன் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்குகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இரு அணிகளும் தலா இரு வெற்றிகளுடன் தொடரில் சமநிலையில் இருப்பதால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com