
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.
ஆசியக் கோப்பை தொடர் நாளை (ஆகஸ்ட் 30) முதல் தொடங்கவுள்ளது. காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமல் இருந்த கே.எல்.ராகுல் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது: கே.எல்.ராகுல் கடந்த சில மாதங்களாக தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை. கே.எல்.ராகுல் எங்களுடன் ஒருவாரம் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் காயத்திலிருந்து முன்னேறி சிறப்பாக விளையாடுகிறார்.ஆனால், தற்போது அவர் காயத்தினால் ஏற்பட்ட சிறு தொந்தரவு காரணமாக ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் இருப்பார். செப்டம்பர் 4-ஆம் தேதி நாங்கள் அவரது காயத்தின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து அவரை அணியில் இணைய செய்வோம். எல்லாம் சரியாக உள்ளது. அவர் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என்றார்.
இந்திய அணி செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானையும், செப்டம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் நேபாளத்தையும் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.