வங்கதேசத்தை வீழ்த்தி டி20 கோப்பையைப் பகிர்ந்து கொண்ட நியூசிலாந்து!

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறையில் நியூசிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசத்தை வீழ்த்தி டி20 கோப்பையைப் பகிர்ந்து கொண்ட நியூசிலாந்து!

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறையில் நியூசிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச அணி நியூசிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று (டிசம்பர் 31) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில்  கேப்டன் ஷாண்டோ அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டிம் சௌதி, மில்னே மற்றும் பென் சியர்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது நியூசிலாந்து. 

நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான டிம் செய்ஃபெர்ட் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் (1 ரன்), கிளன் பிளிப்ஸ் (1 ரன்), மார்க் சேப்மேன் (1 ரன்) என வரிசையாக ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மற்றொரு வீரரான ஃபின் ஆலன் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி நியூசிலாந்துக்கு ரன்களை சேர்த்தார். இருப்பினும், அவர் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும்  2 சிக்ஸர்கள் அடங்கும்.

நியூசிலாந்து 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஜேம்ஸ் நீஷம் மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை விக்கெட்டை இழக்காமல் நிதானமாக 46 ரன்கள் சேர்த்தது. ஆட்டத்தின் 15-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இரண்டாவது டி20 மழையினால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com