கோலி அவுட்டா இல்லையா?: டெஸ்ட் தொடரில் புதிய சர்ச்சை!

ரசிகர்கள் பலரும் தங்களுடைய கோபத்தை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கோலி அவுட்டா இல்லையா?: டெஸ்ட் தொடரில் புதிய சர்ச்சை!

தில்லியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழந்துள்ளார் இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் நேற்று தொடங்கியது. 2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. தில்லியில் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார் புஜாரா.

டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி ஒரு வேகப்பந்து வீச்சாளர், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடமில்லை.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கவாஜா 81 ரன்கள் எடுத்தார். ஷமி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது. கோலி 14, ஜடேஜா 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. கோலிக்கு நல்ல இணையாக 74 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் எடுத்த ஜடேஜா, மர்ஃபி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதனால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு கோலியைப் பெரிதாக நம்பியது இந்திய அணி. 84 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த கோலி சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழந்தார். குனேமன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனதாக நடுவர் அவுட் கொடுத்தார். இதை எதிர்த்து டிஆர்எஸ் வழியாக மேல்முறையீடு செய்தார் கோலி. பந்து முதலில் கால்காப்பில் பட்டதா இல்லை பேட்டில் பட்டதாக எனக் குழப்பம் ஏற்பட்டது. எனினும் தொலைக்காட்சி நடுவர் இல்லிங்வொர்த், கள நடுவரின் தீர்ப்பை உறுதி செய்தார்.

இதனால் கோலி மிகவும் அதிருப்தி அடைந்தார். ஓய்வறையில் தொலைக்காட்சியில், தான் அவுட் ஆன விதத்தைப் பார்த்து தனது அதிருப்தியை அணி வீரர்களிடம் வெளிப்படுத்தினார். முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ட்விட்டரில், கோலி ஆட்டமிழந்தது தொடர்பான நடுவரின் தீர்ப்பு தவறு எனக் கூறினார். அதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன என்றார். ரசிகர்கள் பலரும் தங்களுடைய கோபத்தை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதனால் ட்விட்டரில் #ViratKohli #NOT OUT போன்ற ஹேஷ்டேக்குகள் முன்னணியில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com