ஐபிஎல்லில் இருந்து விலகல்?: அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் சிஎஸ்கே வீரர்!

முதுகில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
ஐபிஎல்லில் இருந்து விலகல்?: அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் சிஎஸ்கே வீரர்!

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன், இந்த வாரம் முதுகில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதையடுத்து, ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து அவர் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி முதல் நியூசிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ஜேமிசன், தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்வானார். 

எனினும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ஜேமிசன் விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான இருநாள் பயிற்சி ஆட்டத்தில் ஜேமிசன் விளையாடினார். எனினும் முதுகில் மீண்டும் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலக நேர்ந்தது. இந்நிலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் ஜேமிசன். இதனால் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகவலை நியூசிலாந்துத் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டட் உறுதி செய்துள்ளார். 

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசனை ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (2021-ல் ஆர்சிபி அணி, ரூ. 15 கோடிக்கு ஜேமிசனைத் தேர்வு செய்தது.)

கடந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின்போது ஜேமிசனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அன்று முதல் அவர் சர்வதேச ஆட்டங்கள் எதிலும் விளையாடவில்லை. இதனால் ஜேமிசனை ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்ய சிஎஸ்கேவைத் தவிர வேறு எந்த அணியும் ஆர்வம் செலுத்தவில்லை. 

காயத்திலிருந்து ஜேமிசன் மீண்டுவிட்டார், மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளார் என்று பயிற்சியாளர் ஃபிளெமிங்கிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் தேர்வு செய்தோம் என்று ஜேமிசனின் தேர்வு குறித்து விளக்கம் அளித்தார் சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

ஐபிஎல் போட்டியில் முழு உடற்தகுதியுடன் சிஎஸ்கே அணிக்காக ஜேமிசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் ஐபிஎல் போட்டியில் ஜேமிசனால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அவர் தகவல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com