உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் இந்தியா - இலங்கை மோத வாய்ப்புள்ளதா?

இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் மட்டுமே போட்டியிடுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் இந்தியா - இலங்கை மோத வாய்ப்புள்ளதா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் இந்தியாவும் இலங்கையும் மோதுவதற்கான வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

தில்லி டெஸ்டில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்த ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பகுதியிலேயே 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசையை, இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முற்றிலுமாகச் சிதைத்தார். அவருக்கு அஸ்வினும் துணை நிற்க, சுழலியே சுருண்டது ஆஸ்திரேலியா. பின்னர் 114 ரன்களை நோக்கி பேட்டிங் செய்த இந்தியா, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 10 விக்கெட்டுகள் சாய்த்த ஜடேஜா ஆட்டநாயகன் ஆனார். 

இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸி. அணி தோற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான சவாலை எதிர்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது ஆஸ்திரேலிய அணி. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் 75.56% புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிச்சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரித்தது. ஆனால், தற்போது இந்தியாவில் இரு டெஸ்டுகளிலும் தோற்றுள்ளதால் புதிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா தோற்று நியூசிலாந்தில் அடுத்து விளையாடும் இலங்கை அணி இரு டெஸ்டுகளையும் வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் இந்தியாவும் இலங்கையும் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆஸ்திரேலியா வெளியேற்றப்படும்.  

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. இந்திய அணியின் இரு வெற்றிகளால் தென்னாப்பிரிக்க அணி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா மீதமுள்ள இரு டெஸ்டுகளிலும் நியூசிலாந்து - இலங்கை ஆகிய அணிகள் இரு டெஸ்டுகளிலும் விளையாடுகின்றன. இந்த நான்கு டெஸ்டுகளும் தான் இறுதிச்சுற்றுப் போட்டியாளர்களை நிர்ணயம் செய்யவுள்ளன. 

இந்தியாவில் விளையாடும் நான்கு டெஸ்டுகளில் ஒன்றை டிரா செய்தாலும் ஆஸ்திரேலிய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். நான்கு டெஸ்டுகளிலும் ஆஸி. அணி தோற்றால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற இலங்கை அணியின் தயவு தேவைப்படும். 

இந்திய அணி குறைந்தபட்சம் 3-1 என வென்றால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறலாம். இல்லாவிட்டால் இலங்கை அணியின் தயவு தேவைப்படும். இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 2-2 என டிரா ஆனால் என்ன ஆகும்? இலங்கை அணி 2-0 என நியூசிலாந்தை வென்றால் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் மோதும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று, ஜூன் 7-11 தேதிகளில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிகள் பட்டியல்

ஆஸ்திரேலியா - 66.67%
இந்தியா - 64.06%
இலங்கை - 53.33%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com