இந்தியாவில் 100 விக்கெட்டுகள்: உமேஷ் யாதவின் அவசியத்தை நாம் உணர்ந்துள்ளோமா?

இந்தியாவில் 100 விக்கெட்டுகள் எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர்களில் குறைந்த ஸ்டிரைக் ரேட் கொண்டவர்...
இந்தியாவில் 100 விக்கெட்டுகள்: உமேஷ் யாதவின் அவசியத்தை நாம் உணர்ந்துள்ளோமா?

இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு அடிக்கடி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் தன்னை நிரூபித்து விடுகிறார். இன்று அப்படியொரு நாள். 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் நாள் முடிவில் ஹேண்ட்ஸ்காம்ப் 7, கிரீன் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். ஆனால், இன்று நிலைமையே மாறிப்போனது. கிரீனை 21 ரன்களுக்கு எல்பிடபிள்யூ செய்தார் உமேஷ் யாதவ். சொந்த மண்ணில் உமேஷ் யாதவின் பலத்தை இந்திய அணி இன்று நன்கு அனுபவித்தது. ஸ்டார்க், மர்ஃபியை போல்ட் செய்து அசத்தினார் உமேஷ் யாதவ். 

கடைசி 6 விக்கெட்டுகளை 11 ரன்களுக்கு இழந்த ஆஸி. அணி, முதல் இன்னிங்ஸில் எதிர்பாராதவிதமாக 76.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குறைந்தது 150 ரன்கள் முன்னிலை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஆஸி. அணியால் 88 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.

இன்று 3 விக்கெட்டுகள் எடுத்த உமேஷ் யாதவ், இந்தியாவில் 100 விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 31 டெஸ்டுகளில் இந்த இலக்கை அடைந்துள்ளார்.

அதைவிடவும் மிகவும் ஆச்சர்யமானது, இந்தியாவில் 100 விக்கெட்டுகள் எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர்களில் குறைந்த ஸ்டிரைக் ரேட் கொண்டவர் உமேஷ் யாதவ் தான். சராசரியும் இதர இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை விடவும் குறைவு.

இந்தியாவில் 100 விக்கெட்டுகள் எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர்களில் குறைந்த ஸ்டிரைக் ரேட்

1. உமேஷ் யாதவ் - 46.1    
2. அஸ்வின் - 46.2
3. ஜடேஜா - 52.2    
4. கபில் தேவ் - 55.7    
5. ஸ்ரீநாத் - 55.8

இந்தியாவில் 100 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் குறைந்த சராசரி 

உமேஷ் யாதவ் - 24.53    
கபில் தேவ் - 26.49    
ஸ்ரீநாத் - 26.61    
இஷாந்த் சர்மா - 31.64    
ஜாகீர் கான் - 35.87

ஒருவேளை ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் உமேஷ் யாதவை விடவும் குறைந்த அளவிலான ஸ்டிரைக் ரேட், சராசரியைக் கொண்டுள்ளார்களா என்கிற கேள்வி உங்களுக்கு வரும். அதற்கான பதில்: 

உமேஷ் யாதவ்: விக்கெட்டுகள் - 101, சராசரி - 24.53, ஸ்டிரைக் ரேட் - 46.1
ஷமி: விக்கெட்டுகள் - 74, சராசரி - 20.63, ஸ்டிரைக் ரேட் - 40.6
பும்ரா: விக்கெட்டுகள் - 14, சராசரி - 15.64, ஸ்டிரைக் ரேட் - 36.4
சிராஜ்: விக்கெட்டுகள் - 7, சராசரி - 24.71, ஸ்டிரைக் ரேட் - 50.5

இதிலிருந்து தெரிவது என்ன?

பும்ராவும் சிராஜும் குறைவான டெஸ்டுகளில் விளையாடியிருப்பதால் அதைக் கொண்டு எடை போட முடியாது. அதேசமயம் பும்ராவைத் தவிர்க்கவும் முடியாது. அவருடைய புள்ளிவிவரங்கள் அந்தளவு ஈர்க்கின்றன. ஷமியை விடவும் இந்தியாவில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள உமேஷ் யாதவ், இதர அம்சங்களில் (சராசரி, ஸ்டிரைக் ரேட்) சற்று பின்தங்கியுள்ளார்.

எனினும் பும்ரா இந்திய அணியில் விளையாடாதபோது இந்தியாவில் ஷமி, உமேஷ் யாதவையே இந்திய அணி தேர்வு செய்யவேண்டும் எனக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள். இந்தியாவில் உமேஷ் யாதவுக்கு மேலும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை இன்றைய பந்துவீச்சு இன்னொருமுறை நிரூபித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com