பிரதமர் மோடியைச் சந்தித்த கெவின் பீட்டர்சன்!

உங்களுடைய பிறந்த நாளன்று சிவிங்கிப் புலிகளை விடுவிப்பது பற்றி உரையாடியதற்கு மிக்க மகிழ்ச்சி.
படம் - twitter.com/KP24
படம் - twitter.com/KP24

பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து சமூகவலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்.

42 வயது பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக 2004 முதல் 2014 வரை 104 டெஸ்டுகள், 136 ஒருநாள், 37 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில் பிரதர் மோடியை தில்லியில் சந்தித்தது பற்றி சமூகவலைத்தளத்தில் பீட்டர்சன் தெரிவித்ததாவது:

உங்களுடைய பிறந்த நாளன்று சிவிங்கிப் புலிகளை விடுவிப்பது பற்றி உரையாடியதற்கு மிக்க மகிழ்ச்சி. அன்பான புன்னகைக்கும் திடமான கைக்குலுக்கலுக்கும் நன்றி. உங்களை மீண்டும் சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்று கூறி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் மூன்று நாள் ராய்சினா உரையாடல் நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக கெவின் பீட்டர்சன் அழைக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்படி, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள்) ஏற்கெனவே இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி, தனது பிறந்த தினத்தில் பிரதமா் மோடி இந்த 8 சிவிங்கிப் புலிகளையும் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டாா். வனப் பகுதியில் விடுவிக்கப்படுவதற்கு முந்தைய கட்டமாக வேட்டையாடும் பகுதியில் தற்போது அவை உலவி வருகின்றன. அடுத்தக் கட்டமாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் சமீபத்தில் கொண்டுவரப்பட்டன. தேசியப் பூங்காவில் தனிமைப்படுத்தலுக்காகத் தயாா் செய்யப்பட்ட பகுதியில் இந்த சிவிங்கிப் புலிகள் விடுவிக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், மத்திய பிரதேச மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் ஆகியோா் கலந்துகொண்டனா்.

உலகில் தற்போதுள்ள சிவிங்கிப் புலிகளின் மொத்த எண்ணிக்கை சுமாா் 7,000 ஆகும். இவற்றில் பெரும்பாலானவை தென்ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. அதீத வேட்டை, வாழ்விடம் இழப்பால் இந்தியாவில் முற்றிலும் அழிந்துபோன சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின்கீழ் தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆண்டுக்கு 12 சிவிங்கிப் புலிகள் என 10 ஆண்டுகளுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com