இரு நாள்களில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்டுக்கு எத்தனை அபராதப் புள்ளிகள்?: கவாஸ்கர் கேள்வி

இந்தியாவில் இதுபோன்ற ஆடுகளங்களையே எதிர்பார்க்க வேண்டும். கடந்த நவம்பர் - டிசம்பரில்...
இரு நாள்களில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்டுக்கு எத்தனை அபராதப் புள்ளிகள்?: கவாஸ்கர் கேள்வி

இரு நாள்களில் முடிவடைந்த பிரிஸ்பேன் டெஸ்டுக்கு எத்தனை அபராதப் புள்ளிகள் வழங்கப்பட்டன என இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்தூரில் நடைபெற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. ஹெட் 49, லபுஷேன் 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த டெஸ்டில் மொத்தமாக 11 விக்கெட்டுகள் எடுத்த லயன், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

இந்தூர் டெஸ்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் குறித்து தனது தீர்ப்பை வழங்கியுள்ளது ஐசிசி. இந்தூர் ஆடுகளத்துக்கு மோசம் எனத் தீர்ப்பு எழுதியுள்ள ஐசிசி நடுவர் கிறிஸ் பிராட், இந்தூர் விளையாட்டுத் திடலுக்கு மூன்று அபராதப் புள்ளிகளையும் வழங்கியுள்ளார். பேட்டுக்கும் பந்துக்குமான சமமான போட்டி ஏற்படவில்லை. ஆடுகளம், ஆரம்பம் முதல் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தது என பிராட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தண்டனையை எதிர்த்து 14 நாள்களுக்குள் பிசிசிஐ மேல்முறையீடு செய்யலாம். 5 வருடக் காலக்கட்டத்தில் எந்த ஒரு விளையாட்டுத் திடல், ஐந்து அபராதப் புள்ளிகளைப் பெறுகிறதோ அதனால் ஒரு வருடத்துக்கு எந்தவொரு சர்வதேச ஆட்டத்தையும் நடத்த அனுமதி வழங்கப்படாது. இந்தச் சிக்கலை இந்தூர் விளையாட்டுத் திடலை எதிர்கொள்ளுமா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

3-வது டெஸ்ட் முதலில் தரம்சாலா மைதானத்தில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்குச் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்தூருக்கு 3-வது டெஸ்டை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதற்கு முன்பு, இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டுகளில் 2017-ல் புணே டெஸ்ட் ஆடுகளம் ஐசிசியால் மோசம் என மதிப்பிடப்பட்டது. அந்த டெஸ்டையும் ஆஸ்திரேலியா தான் வென்றது. அப்போதும் கிறிஸ் பிராட் தான் போட்டி நடுவராக இருந்தார். தற்போதைய டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகள் நடைபெற்ற ஆடுகளங்களுக்கு சராசரி என மதிப்பிட்டுள்ளார் போட்டி நடுவர் ஆன்டி பைகிராஃப்ட்.  

இந்நிலையில் ஐசிசியின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஆடுகளம், பேட்டிங் செய்யக் கடினமாக இருந்தது. ஸ்கோர்களைக் கொண்டே சொல்லிவிடலாம், சுலபமாக பேட்டிங் செய்வதற்கான ஆடுகளம் அல்ல என்று. ஆனால் மூன்று அபராதப் புள்ளிகள் என்பது கடுமையானது. பேட்டிங் செய்வதற்கு அந்தளவுக்குச் சிரமமான ஆடுகளம் என்றால் கவாஜா - லபுஷேன் இடையே எப்படி 90 ரன்கள் கூட்டணி ஏற்பட்டது? 3-வது நாளன்றும் 77 ரன்கள் கூட்டணி அமைந்திருக்காது. இந்தியாவில் இதுபோன்ற ஆடுகளங்களையே எதிர்பார்க்க வேண்டும். கடந்த நவம்பர் - டிசம்பரில் காபா டெஸ்டில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இரு நாள்களில் முடிவடைந்த அந்த டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக விளங்கினார்கள். அவர்களால் பேட்டர்களுக்கு மோசமான காயம் ஏற்பட்டிருக்கலாம். உயிருக்கு ஆபத்து இருந்தது. அதற்கு எத்தனை அபராதப் புள்ளிகள் வழங்கப்பட்டன? யார் அதற்கு போட்டி நடுவராக இருந்தார்? அபராதப் புள்ளிகள் வழங்குவதில் சமத்துவம் இருக்க வேண்டும் என்றார். 

கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இரு நாள்களில் டெஸ்டை வென்றது ஆஸ்திரேலியா. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 48.2 ஓவர்களும் 2-வது இன்னிங்ஸில் 37.4 ஓவர்களும் விளையாடி ஆட்டமிழந்தது. மொத்தமாக 866 பந்துகளே வீசப்பட்டன (இந்தூரில் 1135 பந்துகள்). ஆஸ்திரேலியாவில் குறைந்த ஓவர்களில் முடிந்த டெஸ்டுகளில் இதற்கு 2-வது இடம். இந்த டெஸ்டுக்கு ஐசிசி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன், சராசரிக்கும் கீழ் என மதிப்பிட்டார். ஒரு அபராதப் புள்ளி வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com