வெளியேறியது லக்னௌ: சிஎஸ்கேவுடன் இறுதிப் போட்டியில் மோதப் போவது யார்?

ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் லக்னௌவை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் குவாலிஃபையர் 2 போட்டிக்கு முன்னேறியது.
வெளியேறியது லக்னௌ: சிஎஸ்கேவுடன் இறுதிப் போட்டியில் மோதப் போவது யார்?

ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் லக்னௌவை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் குவாலிஃபையர் 2 போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி இன்று (மே 24) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 23 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். லக்னௌ தரப்பில் நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது லக்னௌ. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் மன்கத் களமிறங்கினர். மன்கத் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கேப்டன் க்ருணால் பாண்டியா மேயர்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. மேயர்ஸ் 18 ரன்களிலும், க்ருணால் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின், மார்கஸ் ஸ்டொய்னிஸ் களமிறங்கினார். அவர் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். இருப்பினும், லக்னௌ அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை இழந்த வண்ணமே இருந்தனர். 

ஆய்ஷ் பதோனி 1 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 0 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். லக்னௌ அணி வீரர்கள் ஸ்டொய்னிஸ், கிருஷ்ணப்ப கௌதம் மற்றும் தீபக் ஹூடா தங்களது விக்கெட்டுகளை ரன் அவுட்டுக்கு இரையாக்கினர். ஹூடா 15 ரன்களிலும், கௌதம் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லக்னௌ தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இறுதியில், லக்னௌ 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், லக்னௌ பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியது.

மும்பை தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆகாஷ் மத்வால் வெறும் 5 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் குவாலிஃபையர் 2 போட்டிக்கு முன்னேறியது. குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸை குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மறுநாள் (மே 26) எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற ஞாயிற்றுக் கிழமை (மே 28) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com