நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை: யுவராஜ் சிங்!

நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை: யுவராஜ் சிங்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தோனியுடனான தனது உறவைக் குறித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த இரண்டு வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி பல போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். நிறைய கோப்பைகளையும் இணைந்து வென்றுள்ளனர்.

இருவருமே தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தோனி உடனான தனது நட்புறவு குறித்து யுவராஜ் சிங் சமீபத்திய பாட்காஸ்ட் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,  “நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை. நாங்கள் கிரிக்கெட்டால் நண்பர்களானோம், ஒன்றாக விளையாடியிருக்கிறோம். தோனியின் வாழ்க்கைமுறை வேறு, என்னுடையது வேறு. நாங்கள் களத்தில் விளையாடும்போது எங்களின் 100 சதவீத உழைப்பை நாட்டுக்காகக் கொடுத்துள்ளோம். அவர் கேப்டன், நான் துணை கேப்டன். அணியில் நுழையும் போது நான் அவருக்கு 4 வருடங்கள் ஜூனியர். கேப்டனுக்கும் உதவி கேப்டனுக்கும் வெவ்வேறு முடிவுகள் இருக்கும்”

 “சில நேரம் எனக்கு பிடிக்காத முடிவுகளை அவர் எடுத்துள்ளார், சில நேரங்களில் நான் எடுக்கிற முடிவுகள் அவருக்கு விருப்பமானதாக இருந்ததில்லை. எல்லா அணியிலும் நடக்கக் கூடியது தான் இது. எனது பணி வாழ்க்கையின் இறுதியில் என்னுடைய பணி குறித்து எனக்கு தெளிவான வரையறை கிடைக்கவில்லை, நான் அவரிடம் ஆலோசனை கேட்டுள்ளேன். 2019 உலகக் கோப்பைக்கு முன்பு அது. தேர்வு குழு என்னைப் பொருத்தமான ஆளாக பார்க்கவில்லை என எனக்குச் சொன்னது அவர் தான். அது சரியாகவும் இருந்தது”  எனப் பேசியுள்ளார்.

விளையாட்டு அணியில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய நண்பர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என வலியுறுத்திய சொல்கிற யுவராஜ் சிங் தோனிக்கு தான் உதவியதையும் அவர் தனக்கு உதவியதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மேலும், “தோனி காயம்பட்டிருந்த போது அவருக்கு ரன்னராக நான் இருந்தேன். ஒரு நேரத்தில் 90 ரன்கள் இருந்த நிலையில் சதம் அடிக்க நான் உதவி செய்ய விரும்பினேன். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதே போல நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் நான் எடுத்திருந்த நிலையில் தோனி 2 பந்துகளைத் தடுத்து என்னை அரை சதம் எடுக்கச் செய்தார்” என நினைவுகூர்கிறார்.

“இப்போது இருவரும் ஓய்வு பெற்றுவிட்டோம். எப்போதாவது சந்தித்தால் நண்பர்களாகத் தான் சந்திப்போம். விளம்பரங்கள் ஒன்றாக நடித்துள்ளோம், எங்களின் கடந்த நாள்கள் குறித்து மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இருவரின் நட்பு குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com