இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்திய நியூசிலாந்து!

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்திய நியூசிலாந்து!

இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
Published on

இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையின் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசல் பெரேரா 51 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபெர்க்யூசன், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும்  கைப்பற்றினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த இணை நியூசிலாந்துக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், டெவான் கான்வே 45 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 14 ரன்களிலும், மார்க் சாப்மேன் 7  ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் டேரில் மிட்செல் மற்றும் கிளன் பிளிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். டேரில் மிட்செல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். 

இறுதியில் 23.2 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து இலங்கையை 5  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கிளன் பிளிப்ஸ் 17 ரன்களுடனும், டாம் லாதம் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும், மஹீஸ் தீக்‌ஷனா மற்றும் துஷ்மந்தா சமீரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தனது அரையிறுதிக்கான வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com