இறுதிப்போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த கால நிலையை மாற்றுவார்களா?

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இன்று (செப்டம்பர் 17) இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இறுதிப்போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த கால நிலையை மாற்றுவார்களா?

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இன்று (செப்டம்பர் 17) இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் அனுபவமிக்க வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த ஆசியக் கோப்பை  தொடரில் சாதனை படைத்துள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். 

இந்திய அணியின் ஆகச் சிறந்த வீரர்களான இருவரும் ஒருநாள் தொடரின் (ஆசியக் கோப்பை & உலகக் கோப்பை) இறுதிப் போட்டிகளில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. அதனால், ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ரோஹித், விராட் இருவருக்குமே பெரிய அளவில் ஸ்கோர் எடுக்க ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. 

ஒருநாள் தொடர்களில் 5 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா வெறும் 101 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 20.2 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 77 ஆகும். இந்த 5  இறுதிப்போட்டிகளில் ஒரு போட்டியில் கூட அவர் அரைசதம் எடுக்கவில்லை. அவரது அதிகபட்ச ஸ்கோர் 48 ஆக உள்ளது. 

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிகளில் ரோஹித் சர்மா,  3 ரன்கள் (2008, இலங்கைக்கு எதிராக), 41 ரன்கள் (2010, இலங்கைக்கு எதிராக), 48 ரன்கள் (2018, வங்கதேசத்துக்கு எதிராக)  எடுத்துள்ளார். அதேபோல ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிகளில் 9 ரன்கள் (2013, இங்கிலாந்துக்கு எதிராக), 0 ரன்கள் (2017, பாகிஸ்தானுக்கு எதிராக) எடுத்தார். 

ரோஹித் சர்மாவைப் போலவே விராட் கோலியும் இறுதிப்போட்டிகளில் ஓரளவுக்கு மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் விளையாடிய 5 இறுதிப்போட்டிகளில் வெறும் 111 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அவரது சராசரி 27.80 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 88 ஆகும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 43 ஆகும். 

2010 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் எடுத்திருந்தார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பொறுத்தவரை 35 ரன்கள் (2011, இலங்கைக்கு எதிராக) எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் 43 ரன்கள் (2013, இங்கிலாந்துக்கு எதிராக), 5 ரன்கள் (2017, பாகிஸ்தானுக்கு எதிராக) எடுத்துள்ளார். 

முக்கியமான தொடர்களின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடத் தவறுகிறார். விராட் கோலியைப் பொருத்தவரை அவருக்கு கிடைக்கும் சிறந்த தொடக்கத்தை அரைசதம் மற்றும் சதமாக மாற்றத் தவறுகிறார். அதனால், இன்றைய ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி அவர்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பாகும். 

இலங்கைக்கு எதிரான இன்றைய ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com