பாரிஸ் ஒலிம்பிக்ஸை 40 நாடுகள் புறக்கணிக்க வேண்டும்: ஐஓசியின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பாரிஸ் ஒலிம்பிக்ஸை 40 நாடுகள் புறக்கணிக்க வேண்டும்: ஐஓசியின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, 2024-ம் வருடம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை 40 நாடுகள் புறக்கணித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

2021-ல் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா 39 தங்கங்களையும் சீனா 38 தங்கங்களையும் வென்று முதலிரண்டு இடங்களைப் பிடித்தன. அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ், பாரிசில் 2024-ல் நடைபெறவுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியின்போது, டோக்கியோ நகர மேயா் யுரிகோ கொய்கோ ஒலிம்பிக் கொடியை சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பாக்கிடம் ஒப்படைக்க, அதை அவா் பாரீஸ் நகர மேயா் ஆனி ஹிடால்கோவிடம் ஒப்படைத்தாா். முதல் முறையாக டோக்கியோவில் நிறைவு நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில், பாரீஸ் நகரிலும் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, 2024-ம் வருடம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு இருமுறை (1900, 1924) பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.  அதாவது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியை பாரிஸ் மீண்டும் நடத்தவுள்ளது. 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ரஷிய, பெலாரஸ் வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள், பொதுவான கொடியுடன் பங்கேற்பார்கள் என்று கடந்த வாரம் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ( ஐஓசி) அறிவித்தது. கடவுச்சீட்டின் காரணமாக எந்த ஒரு வீரரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதைத் தடுக்கக் கூடாது என்று கூறியது. இது நடந்தால் பாரிஸ் ஒலிம்பிக்ஸைப் புறக்கணிப்போம் என உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மேலும் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. போலந்து, லிதுவேனியா, லத்வியா, எஸ்டோனியா போன்ற நாடுகளும் ஐஓசியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  

உக்ரைன் மீது போரில் ஈடுபடும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல விளையாட்டு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த வருடம் கால்பந்து உலகக் கோப்பை உள்பட பல முக்கியமான போட்டிகளில் ரஷிய வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐஓசியின் இந்த முடிவு, உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நியாயமான செயலாக மாற்றும் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து  போலந்து, லிதுவேனியா, லத்வியா, எஸ்டோனியா நாடுகளின் விளையாட்டு அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

ரஷிய, பெலாரஸ் வீரர்களை மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதால் இதர நாட்டு வீரர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாவார்கள். இரு நாட்டு வீரர்களையும் போட்டியில் எதிர்கொள்ள நேரிடும். மேலும் உக்ரைன் மீதான தாக்குதலைத் திசை திருப்பும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்கள். போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் கமில் கூறியதாவது: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 40 நாடுகள் புறக்கணிக்க வேண்டும். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்ஸின் முக்கியத்துவத்தைக் குறைக்க முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com