கடைசிப் பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: அறிமுகப் போட்டியிலேயே அசத்திய ஷிவம் மாவி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசிப் பந்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
கடைசிப் பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: அறிமுகப் போட்டியிலேயே அசத்திய ஷிவம் மாவி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசிப் பந்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கான இடையிலான 3  போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜனவரி 3) தொடங்கியது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தீபக் ஹூடா அதிகபட்சமாக 23 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இலங்கை அணி. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குஷல் மெண்டிஸ் களமிறங்கினர். இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பதும் நிசங்கா 1 ரன்னில் ஷிவம் மாவி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய தனஞ்ஜெயா டி சில்வா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், இலங்கை அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறியது. 

அதன்பின் குஷல் மெண்டிஸ் உடன் ஜோடி சேர்ந்தார் அசலங்கா. அவர் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய குஷல் மெண்டிஸ் 28 ரன்களில் விக்கெட்டினைப் பறிகொடுத்தார். அதன் பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் 27 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஹசரங்கா 10 பந்துகளில் அதிரடியாக 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

சீரான இடைவெளியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணி வீரர்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆட்டத்தில் ஸ்வாரஸ்யம் தொற்றிக் கொண்டது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட அக்ஸர் படேல் பந்து வீச வந்தார். அவர் கடைசி ஓவரின் 3-வது பந்தில் கருணாரத்னே சிக்ஸர் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அக்ஸர் வீசிய 5-வது பந்தில் ரன் அவுட் கிடைக்க கடைசி பந்தில் இலங்கை அணிக்கு வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி பந்தை சிறப்பாக வீசி 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ரன் அவுட்டும் எடுக்கப்பட்டது. இலங்கை அணி 160 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம், இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடிய ஷிவம் மாவி 4 ஓவர்கள் வீசி வெறும் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்சல் படேல் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com