தில்லுக்குத் துட்டு: பாண்டியாவின் புதிய அணுகுமுறை!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்றது இந்திய அணி. 
தில்லுக்குத் துட்டு: பாண்டியாவின் புதிய அணுகுமுறை!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்றது இந்திய அணி. 

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய இலங்கை 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்களே எட்டியது. இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஷிவம் மாவி, 4 ஓவா்களில் 22 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தாா். இந்திய இன்னிங்ஸின் கடைசிக்கட்டத்தில் 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்த தீபக் ஹூடா ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா துணிச்சலாக சில முடிவுகளை எடுத்தார். ஷுப்மன் கில், மாவியை டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகம் செய்துவைத்தார். இதனால் ருதுராஜ் விளையாட முடியாமல் போனது. வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அக்‌ஷர் படேலைத் தேர்வு செய்தார். 

இந்தியத் தொடக்க வீரர்களான இஷான் கிஷனும் ஷுப்மன் கில்லும் அதிரடியாகத் தொடங்கினார்கள். முதல் 7 பந்துகளில் இந்திய அணி 22 ரன்கள் எடுத்தது. எனினும் 2 விக்கெட்டுகளை இழந்து பவர்பிளேயில் 41/2 ரன்கள் எடுத்தது இந்தியா. சஞ்சு சாம்சனை முன்னே களமிறங்க விட்டு 5-வது பேட்டராக விளையாட வந்தார் பாண்டியா. 141. ஓவர்களில் இந்திய அணி 94/4 எனத் தடுமாறியபோது சிறப்பாக விளையாடி கெளரவமான ஸ்கோரைத் தந்தார்கள் தீபக் ஹூடாவும் அக்‌ஷர் படேலும். இதனால் அக்‌ஷர் படேலைத் தேர்வு செய்தது சரியான முடிவாக அமைந்தது. 

இலங்கை அணியின் இன்னிங்ஸில் முதல் ஓவரை வீசினார் ஹார்திக் பாண்டியா. கடந்த வருடம் அவருடைய உடற்தகுதி குறித்து பல சந்தேகங்கள் இருந்தபோது தற்போது முழு உடற்தகுதியுடன் பவர்பிளே ஓவர்களை வீசும் அளவுக்கு முன்னேறி விட்டார் பாண்டியா. டி20க்கு அறிமுகமான மாவி, உற்சாகமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர்பிளேயில் மூன்று ஓவர்களைத் தைரியமாக வீசினார் பாண்டியா. உம்ரான் மாலிக்கை நடு ஓவர்களில் அதிகமாகப் பயன்படுத்தினார். இந்த ஆட்டத்தின் பெரிய ஏமாற்றம், சஹால் தான். 2 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 26 ரன்கள் எடுத்தார். அதேபோல ஹர்ஷல் படேலும் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் 41 ரன்களைக் கொடுத்தார். 

முதல் டி20 ஆட்டத்திலேயே பாண்டியா எடுத்த துணிச்சலான முடிவு, கடைசி ஓவரை அக்‌ஷர் படேலுக்கு வழங்கியது தான். தனக்கு ஒரு ஓவர் மீதமிருந்தும் அக்‌ஷர் படேலின் திறமையை நம்பினார். அதேபோல அவரும் நன்றாகப் பந்துவீசி நூலிழையில் வெற்றி பெற வைத்தார். சுபம்.

டி20 கிரிக்கெட்டில் ஒரு கேப்டன் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தயங்கக் கூடாது. பாண்டியா அத்தகைய குணங்களைக் கொண்டவராக இருக்கிறார். இதனால் வீரர்களும் சவாலான தருணங்களை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறார்கள். இன்னும் பல ஆச்சர்யங்களை பாண்டியா வழங்குவார் என நம்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com