இந்திய அணிக்குத் தேர்வான புதிய அதிரடி வீரர்: யார் இந்த ஜிதேஷ் சர்மா?

2016-ல் மும்பை அணி, ஜிதேஷை ரூ. 10 லட்சத்துக்குத் தேர்வு செய்து...
இந்திய அணிக்குத் தேர்வான புதிய அதிரடி வீரர்: யார் இந்த ஜிதேஷ் சர்மா?

இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளதால் விதர்பாவைச் சேர்ந்த 29 வயது ஜிதேஷ் சர்மாவுக்கு இந்திய அணியில் முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் பெயர் பரிச்சயமாக இருந்திருக்கும்.

ஐபிஎல் 2022 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜிதேஷ் சர்மா, 10 இன்னிங்ஸில் 234 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 163.63. தவன், மயங்க் அகர்வால், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், ஷாருக் கான் எனப் பல பிரபல வீரர்கள் இடம்பெற்றிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜிதேஷ் சர்மா தான் அதிக ஸ்டிரைக் ரேட்டைக் கொண்டிருந்தார். இதற்குப் பிறகு நடைபெற்ற இந்திய அளவிலான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியிலும் தூள் கிளப்பினார். 10 இன்னிங்ஸில் 224 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 175.00. இரு முக்கியமான போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்த ஜிதேஷ் சர்மாவை எப்படி விட்டுவைக்க முடியும்? தினேஷ் கார்த்திக் மீது இந்தியத் தேர்வுக்குழுவுக்கு நம்பிக்கை போய்விட்டது. அவருக்கு மாற்றாகத் தற்போது ஜிதேஷ் சர்மா தேர்வாகியுள்ளார். 

மேலும் அவர் விக்கெட் கீப்பராகவும் உள்ளதால் இந்திய அணிக்குச் சேர்ப்பது வசதியாகி விட்டது. இஷான் கிஷன், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் என இந்திய அணியில் அதிரடி பேட்டர்கள் + விக்கெட் கீப்பர்களின் வரிசையில் ஜிதேஷ் சர்மாவும் தற்போது இணைந்துள்ளார்.

விதர்பா அணியில் முதலில் தொடக்க வீரராக விளையாடி வந்த ஜிதேஷ் சர்மா, அணிகளின் தேவைக்கேற்ப கடைசி ஓவர்களில் விளையாடும் முக்கிய பேட்டராக மாறிவிட்டார். அதுதான் தற்போது இந்திய அணியிலும் அவரைச் சேர்த்துள்ளது.  

ஐபிஎல் போட்டியில் 2016-ல் மும்பை அணி, ஜிதேஷை ரூ. 10 லட்சத்துக்குத் தேர்வு செய்து பிறகு 2018 வரை ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பளிக்காமல் விடுவித்தது. 

ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு ஜிதேஷ் சர்மாவைத் தேர்வு செய்தது பஞ்சாப் கிங்ஸ். சிஎஸ்கேவுக்கு எதிராக முதல் ஐபிஎல் ஆட்டத்தை விளையாடினார். விக்கெட் கீப்பராகப் பணியாற்றி தோனியின் கேட்சைப் பிடித்து டிஆர்எஸ் முறையீடு மூலமாக வெற்றி கண்டார். பேட்டிங்கில் 3 சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். 

இந்திய அணிக்கு ஒரு புதிய கிடைத்துள்ளது. அவர் என்னென்ன வித்தைகள் காட்டப் போகிறார் என்று பார்ப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com