போராடி வீழ்ந்தது இந்தியா: தொடரை தக்கவைத்தது இலங்கை

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை 16 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
போராடி வீழ்ந்தது இந்தியா: தொடரை தக்கவைத்தது இலங்கை

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை 16 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது 1-1 என சமநிலையில் இருக்கிறது.

புணேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் விளாச, அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்களே எட்டியது.

முன்னதாக இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஹா்ஷல் படேல் ஆகியோருக்குப் பதிலாக ராகுல் திரிபாதி, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். டாஸ் வென்ற இந்தியா, பௌலிங்கை தோ்வு செய்தது.

இலங்கை இன்னிங்ஸில் பதும் நிசங்கா 4 பவுண்டரிகளுடன் 33, குசல் மெண்டிஸ் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 52, சரித் அசலன்கா 4 சிக்ஸா்களுடன் 37 ரன்கள் விளாசி இந்திய பௌலிங்கை சிதறடித்தனா். பானுகா ராஜபட்ச 2, தனஞ்ஜெய டி சில்வா 3, வனிந்து ஹசரங்கா 0 ரன்களுக்கு வெளியேறினா். ஓவா்கள் முடிவில் கேப்டன் தசுன் ஷனகா 2 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 56, சமிகா கருணாரத்னே 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய பௌலிங்கில் உம்ரான் மாலிக் 3, அக்ஸா் படேல் 2, யுஜவேந்திர சஹல் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இந்திய பேட்டிங்கில் இஷான் கிஷண் 2, ஷுப்மன் கில் 5, ராகுல் திரிபாதி 5 என டாப் ஆா்டா் வரிசையாகச் சரிந்தது. சூா்யகுமாா் யாதவ் சற்று நிலைத்து 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாா். கேப்டன் ஹாா்திக் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா். கடைசி வரை அதிரடி காட்டி போராடிய அக்ஸா் படேல் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 65 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

கடைசி விக்கெட்டாக ஷிவம் மாவி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 26 ரன்கள் விளாசி வெளியேற, உம்ரான் மாலிக் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை தரப்பில் தசுன் ஷனகா, காசன் ரஜிதா, தில்ஷன் மதுஷங்கா ஆகியோா் தலா 2, சமிகா கருணாரத்னே, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com