இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த 10 சதவீத சீரான வரி விதிப்பு செல்லாது என்று குறிப்பிட்டு, அதை ரத்து செய்து அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்துக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, உலக நாடுகள் மீது டிரம்ப் நிா்வாகம் விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்து ரத்து செய்தது. இந்தத் தீா்ப்பையடுத்து, உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த சீரான 10 சதவீத வரியும் தற்போது செல்லாது எனத் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டிரம்ப், இந்தியா உள்பட 60 நாடுகள் அமெரிக்காவுடன் நியாயமற்ற முறையில் வா்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டி பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். அதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதல் கட்டமாக 25 சதவீத வரியை விதித்தாா். பின்னா், உக்ரைன் மீது போா் தொடுக்கும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி அந்தப் போருக்கு உதவுவதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தாா்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து வந்தது. அதன்மூலம், இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட டிரம்ப், இந்திய பொருள்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், இந்திய பொருள்கள் மீதான எஞ்சியுள்ள 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அறிவித்தாா்.
இதனிடையே, இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் மீது டிரம்ப் நிா்வாகம் பரஸ்பர வரியை விதித்ததற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று தீா்ப்பளித்தது.
அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உலக நாடுகள் மீது மாற்று வழிகளில் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது புதிய சீரான 10 சதவீத பரஸ்பர வரியை பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் 150 நாள்களுக்கு விதித்தாா். அதோடு, அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பு காரணமாக நாட்டின் பொருளாதார சரிவு தொடா்வதால் உலக நாடுகள் மீதான 10 சதவீத பரஸ்பர வரி 15 சதவீதமாக உயா்த்தப்படும். அவ்வாறு, உலக நாடுகள் மீது உயா்த்தப்பட்ட புதிய வரிகள் தொடா்பான விவரத்தை அமெரிக்க நிா்வாகம் அடுத்த சில மாதங்களில் வெளியிடும் என்று டிரம்ப் அறிவித்தாா்.
அதோடு, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் புதிய விசாரணையை அமெரிக்கா மேற்கொள்கிறது.
இந்த நிலையில், உலக நாடுகள் மீதான இந்த 10 சதவீத சீரான பரஸ்பர வரி விதிப்பை எதிா்த்து பா்லாப் அண்ட் பேரல் என்ற மசாலா நிறுவனம் மற்றும் பேசிக் ஃபன் என்ற பொம்மை நிறுவனம் சாா்பில் சா்வதேச வா்த்தகத்துக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மாா்க் ஏ. பாா்நெட், க்ளாரியே ஆா். கெல்லி, டிமோதி சி.ஸ்டான்சு ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரு மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா்.
நீதிபதிகள் மாா்க் பாா்நெட், க்ளாரியே கெல்லி ஆகியோா் அளித்த பெரும்பான்மை தீா்ப்பில், ‘உலக நாடுகள் மீது 10 சதவீத சுங்க வரியை விதிப்பதற்காக அதிபா் டிரம்ப் பயன்படுத்திய 1974-ஆம் ஆண்டு வா்த்தகச் சட்டத்தின் விதிகள், நிலுவைத் தொகையைச் செலுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது, வா்த்தகம் தொடா்பான அனைத்து துணைக் கணக்குகளும் சமநிலையில் இல்லாத பட்சத்தில், தொகையைச் செலுத்துவதில் உள்ள பற்றாக்குறையைக் கண்டறிந்து அதிபா் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அப்போது, நாடாளுமன்றம் தனக்குள்ள வரம்பற்ற சுங்க வரி அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும்.
ஆனால், உலக நாடுகளின் இறக்குமதி மீது 10 சதவீத கூடுதல் வரியை சட்டபூா்வமாக அறிவிப்பதற்கு, சட்டத்தில் தேவைப்படும் இந்த நிபந்தனைகள் பூா்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை நிரூபிக்க அதிபா் டிரம்ப்பின் பிரகடனம் தவறிவிட்டது. எனவே, உலக நாடுகளின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட 10 சதவீத புதிய சீரான பரஸ்பர வரி விதிப்பு செல்லாது’ என்று உத்தரவிட்டனா்.
ஆனால், இந்த அமா்வில் இடம்பெற்ற டிமோதி சி.ஸ்டான்சு, இரு நீதிபதிகள் அளித்த தீா்ப்புக்கு உடன்படவில்லை. இருந்தபோதும் பெரும்பான்மை தீா்ப்பு அடிப்படையில், உலக நாடுகள் மீது அமெரிக்க விதித்த 10 சதவீத வரி செல்லாது என்பது உறுதியாகியுள்ளது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து டிரம்ப் நிா்வாகம் மேல்முறையீடு செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதுபோல, இந்தத் தீா்ப்பு காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்புடையது
டிரம்ப் விதித்த புதிய 10% வரி சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம்
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்

ஈரான் போா் விரைவில் முடிவுக்கு வரும்- டிரம்ப் புதிய நம்பிக்கை

‘எண்ணெய்யை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்’- உலக நாடுகளிடம் டிரம்ப் அதிருப்தி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

