பும்ராவுக்கு என்ன ஆச்சு?: ரோஹித் சர்மா விளக்கம்

பும்ராவின் உடற்தகுதி விவகாரத்தை நாம் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
பும்ராவுக்கு என்ன ஆச்சு?: ரோஹித் சர்மா விளக்கம்

பும்ராவின் உடற்தகுதி விவகாரத்தை நாம் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

29 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் டி20 உலகக் கோப்பை உள்பட பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். திடீர் திருப்பமாக, ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பந்துவீசும் அளவுக்கான உடற்தகுதியை அடைய இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி, கடந்த டிசம்பர் 27 அன்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு திடீரென ஜனவரி 3 அன்று இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டதாகக் கூடுதல் தகவல் அளிக்கப்பட்டது. காயத்திலிருந்து பும்ரா குணமாகிவிட்டார் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 9 அன்று, பும்ரா ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதாக மற்றொரு அறிவிப்பு வெளியானது. மும்பையில் பந்துவீச்சுப் பயிற்சி எடுத்தபோது தான் பும்ராவால் சர்வதேச ஆட்டத்தில் முழு உடற்தகுதியுடன் விளையாடுவது தற்போது சாத்தியமில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அணியில் இருந்து அவர் விலகியுள்ளார். 

இந்நிலையில் பும்ராவின் காயம் பற்றி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் கடுமையாக உழைத்து உடற்தகுதியை அடைந்தார். முழு உடற்தகுதியை அடைந்த பிறகு பந்துவீச்சில் ஈடுபட்டார். கடைசி இரு நாள்களில் தான் இச்சம்பவம் நடைபெற்றது. அவருக்கு முதுகில் மீண்டும் காயம் ஏற்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வலி தான். காயம் பற்றி பும்ரா ஏதாவது சொன்னால் நாம் அதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். தொடரில் விளையாட வேண்டாம் என்கிற முடிவை எடுக்க வேண்டியது முக்கியம் எனக் கருதினேன். அணியில் சேர்த்தபோது அவர் உடற்தகுதியுடன் தான் இருந்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. எனவே அவருடைய காயங்கள் குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார். 

தற்போதைய நிலவரப்படி பும்ராவுக்கு மேலும் மூன்று வாரம் ஓய்வு தேவைப்படுவதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com