நியூசி. எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூசி. எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி  நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர், இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் 12 ஓவர்கள் வரை நன்கு விளையாடி 60 ரன்கள் சேர்த்தார்கள். 38 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் சர்மா, டிக்னர் பந்தில் ஆட்டமிழந்தார். 

சமீபகாலமாக மூன்று ஒருநாள் சதங்களை எடுத்த விராட் கோலி, 8 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் போல்ட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதன்பிறகு கில்லும் சூர்யகுமார் யாதவும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். 52 பந்துகளில் அரை சதமெடுத்தார் கில். 4 பவுண்டரிகள் அடித்த சூர்யகுமார், 31 ரன்களில் மிட்செல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு 87 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ஷுப்மன் கில். இது அவருடைய 3-வது ஒருநாள் சதம். 109 ரன்களை எடுத்தபோது 1000 ஒருநாள் ரன்களைப் பூர்த்தி செய்தார். 18 இன்னிங்ஸில் 1000 ஒருநாள் ரன்களை எடுத்த ஷுப்மன் கில், இந்த இலக்கை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். 

பாண்டியா துரதிர்ஷ்டவசமாக 28 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பரின் கிளவுஸ் உரசியதால் ஸ்டம்புகளின் பைல்ஸ் விழுந்ததாகப் பலரும் கருதிய நிலையில் பந்து உரசி விழுந்ததாக 3-வது நடுவர் கருதி அவுட் என அறிவித்தார். பிறகு வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களிலும் ஷர்துல் தாக்குர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 

122 பந்துகளில் 150 ரன்களை எடுத்த ஷுப்மன் கில், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். 145 பந்துகளில் இரட்டைச் சதம் எடுத்து சாதனை படைத்தார். கடைசி ஓவரில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 149 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் அடித்தார் கில். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர் (23 வயது) என்கிற சாதனையைப் படைத்தார். 

இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. 

அதனைத் தொடர்ந்து, 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் நியூஸிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். அந்த அணியின் ஃபின் அலென் நிதானமாக விளையாடினாலும் கன்வே, நிகோலஸ், மிட்செல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததும்  நியூஸிலாந்து தடுமாறத் துவங்கியது. ஆலன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால், பின்னர் களமிறங்கிய மைக்கெல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய பந்துவீச்சை திணறடித்தனர். 

சாண்ட்னெர் 57 ரன்களில் ஆட்டமிழந்தாலும் பிரேஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் 77 பந்துகளில் 140 ரன்களைக் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.  

இறுதியில் 49.2 ஓவர்களில் நியூசி அணி 337 ரன்களை எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com