மே. இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி!
By DIN | Published On : 15th July 2023 05:34 AM | Last Updated : 15th July 2023 10:11 AM | அ+அ அ- |

படம்: டிவிட்டர் | பிசிசிஐ
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை இந்தியா பெற்று அசத்தியுள்ளது.
கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள், 150 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அலிக் அதனாஸ் 47 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் சரித்தனா்.
பின்னா் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவில் ஜெய்ஸ்வால் - ரோஹித் கூட்டணி அபாரமாக ரன்கள் சோ்த்தது. முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்த நிலையில் இந்த பாா்ட்னா்ஷிப் பிரிந்தது.
ரோஹித் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த ஷுப்மன் கில் 6 ரன்களுக்கே நடையைக் கட்டினாா். அறிமுக டெஸ்டில் அசத்திய ஜெய்ஸ்வால் 387 பந்துகளுக்கு 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ரஹானே 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, விராட் கோலியும் ஜடேஜாவும் பொறுமையாக விளையாடினர். 76 ரன்களுக்கு கோலி அவுட்டாக இந்திய அணி 421 ரன்கள் பெற்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
ஜடேஜா 76, இஷான் கிஷன் 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஃபாலோ அனை தவிர்க்க 272 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவராக வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
50.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அஸ்வின் 7, ஜடேஜா 2, சிராஜ் 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஒரு இன்னிங்ஸ் பேட்டிங் செய்யாத நிலையில், 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 7 என மொத்தம் 12 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...