நஜ்முல் அதிரடி: டி20 போட்டியில் இங்கிலாந்தை முதல் முறையாக வீழ்த்திய வங்கதேசம்!

நஜ்முல் அதிரடி: டி20 போட்டியில் இங்கிலாந்தை முதல் முறையாக வீழ்த்திய வங்கதேசம்!

நஜ்முல் ஹுசைனின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேசம் முதல் முறையாக டி20 போட்டிகளில் இங்கிலாந்தை வென்றுள்ளது.

நஜ்முல் ஹுசைனின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேசம் முதல் முறையாக டி20 போட்டிகளில் இங்கிலாந்தை வென்றுள்ளது.

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (மார்ச் 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 67 ரன்களும், பில் சால்ட் 38 ரன்களும் எடுத்தனர். 

இதனையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது வங்கதேசம். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டன் தாஸ் 12 ரன்களும், ரோனி தாலூக்தார் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷகீப்-அல்-ஹசன் 24 பந்துகளில் 34 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன்மூலம், 18 ஓவர்களின் முடிவில் இலக்கை அடைந்து 12 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது வங்கதேசம். 

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வங்கதேசம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற மார்ச் 12 (ஞாயிற்றுக்கிழமை) ஆம் தேதி தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com