”எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தால் பரவாயில்லை, ஆனால்....” மனம் திறக்கும் ஷுப்மன் கில்!

நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தால் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் மனம் திறந்துள்ளார்.
”எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தால் பரவாயில்லை, ஆனால்....” மனம் திறக்கும் ஷுப்மன் கில்!
Published on
Updated on
2 min read

நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தால் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்குள் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதில் 2 டெஸ்ட் சதங்கள், 3 ஒரு நாள் சதங்கள் மற்றும் ஒரு டி20 சதம் அடங்கும். அண்மையில், அவர் ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் விளாசியிருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இன்று (மார்ச் 11) சதமடித்து அசத்தினார். 

அவர் 128 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தான் குறைந்த அளவில் ரன்கள் எடுத்து தடுமாறிய காலம் குறித்து ஷுப்மன் கில் மனம் திறந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் 52 ரன்கள் மற்றும் 44 ரன்கள் எடுத்திருந்தேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினேன். நான் நன்றாக பேட்டிங் செய்கிறபோது அதிக அளவில் தடுப்பாட்டம் மேற்கொண்டு அதிக நேரம் களத்தில் இருக்க நினைக்கிறேன். பந்துகளை தடுத்து ஆடுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறேன். நான் அதிக நேரம் பேட்டிங் செய்ய வேண்டியிருக்கும் என எனக்கு நானே அழுத்தத்தினை உருவாக்கிக் கொள்கிறேன். ஆனால், அது என்னுடைய இயல்பான ஆட்டம் இல்லை.

ஒரு முறை நிலைத்து நின்று நன்றாக அடித்து விளையாட ஆரம்பித்து விட்டால் அதனையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதுதான் என்னுடைய ஆட்டம். உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தால் பரவாயில்லை என்பதை எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், பிரச்னை என்னவென்றால் நான் எனக்கு இயல்பாக வராத ஆட்டத்தை ஆட முயற்சித்து ஆட்டமிழந்தேன். ஆட்டமிழந்ததற்கு முக்கியக் காரணம் நன்றாக நிலைத்து விளையாட ஆரம்பித்த பிறகும் தடுத்து விளையாட நினைத்ததே ஆகும். நான் ஒரு ஷாட் ஆட நினைத்து ஆட்டமிழந்தால் அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். நன்றாக விளையாடும் போது சரியாக பந்தை அடிக்கவில்லை அதனால் ஆட்டமிழந்தோம் என்று தோன்றியிருக்கும். ஆனால், என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

இந்தத் தவறை சரிசெய்வதற்கான வழி நான் எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொள்ள கூடாது. அடுத்தமுறை இது மாதிரியான தருணத்தில் அதிக அழுத்தத்துக்கு ஆளாகாமல் நாம் நிலைத்து நின்று ஆடி வருகிறோம் அதனால் நமது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என சொல்லிக் கொள்ள வேண்டும். அது என்னுடைய மனம் சார்ந்தது. மோதேரா ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு எளிதானதாக இல்லை. இந்த மாதிரியான ஆடுகளத்தில் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபடுவது கடினம். ஆனால், ஒரு ஒரு ரன்னாக எடுக்க வேண்டியதும் அவசியம்.  

நீங்கள் உங்களுக்குள் ஒரு விஷயத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் பவுண்டரிகள் வராதபோது, ரன்கள் பெரிய அளவில் வரவில்லை இருப்பினும் கண்டிப்பாக ஒரு ஓவரில் ஓரிரு பவுண்டரிகள் வரும் என்பதை மனதில் வைத்து விளையாட வேண்டும். பொறுமையை இழந்து விடாமல் நிதானமாக விளையாடினால் பவுண்டரிகள் தானாக வரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com