ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
ஆசியக் கோப்பை தொடரில் நேற்று (செப்டம்பர் 2) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மழை காரணமாக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பேட்டிங் செய்யும்போது இடையிடையே மழை குறுக்கிட்டது. பின்னர், போட்டி தொடங்கப்பட்டு இந்திய அணி தனது இன்னிங்ஸை விளையாடி முடித்தது. பாகிஸ்தான் களமிறங்குவதற்கு முன்பு மீண்டும் மழை தொடர்ந்தது. மழை அதிகமானதால் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.
இதையும் படிக்க: ஆதித்யா எல்-1: புதிருக்கு விடை தேடும் பயணம்!
இந்த நிலையில், நேற்றையப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அனைவரின் விக்கெட்டினையும் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் (ஷகின் அஃப்ரிடி, ஹாரிஷ் ரௌஃப், நசீம் ஷா) கைப்பற்றி ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆசியக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்னதாக இந்திய அணி தனது விக்கெட்டுகள் அனைத்தையும் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பறிகொடுத்ததில்லை. முதல் முறையாக இந்திய வீரர்கள் அனைவரும் பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சுக்கு இரையாகியுள்ளனர்.
பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகின் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளையும், ஹாரிஷ் ரௌஃப் மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.