இந்தியாவை விட எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: பாபர் அசாம்
By DIN | Published On : 09th September 2023 03:58 PM | Last Updated : 09th September 2023 03:58 PM | அ+அ அ- |

இலங்கை மைதானங்களில் விளையாடிய அனுபவம் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற சாதகமாக இருக்குமென அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (செப்டம்பர் 9) இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இலங்கை மைதானங்களில் விளையாடிய அனுபவம் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற சாதகமாக இருக்குமென தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: ஆல்ரவுண்டராக இருப்பதால் எனக்கு வேலைப்பளு அதிகம்: ஹார்திக் பாண்டியா
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருகிறோம். அதனால், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையில் தொடர்ச்சியாக நாங்கள் விளையாடி வருகிறோம். டெஸ்ட் போட்டிகளில் விளையாடினோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடினோம். அதன்பின், இலங்கை பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாடினோம். அதனால், நாளையப் போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு அதிக அளவில் சாதகமான சூழல் உள்ளது.
எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஒருவர் விக்கெட் எடுக்கத் தவறினால், மற்றொரு பந்துவீச்சாளர் விக்கெட் எடுக்கிறார். ஆட்டத்தின் முடிவில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்படுகிறோம். வானிலை நன்றாக இருக்கும் என நம்புகிறோம். எங்களது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...