
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதைப் போன்று இந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்று மீண்டும் ஒரு மகிழ்ச்சியான தருணத்தை இந்திய அணி உருவாக்கும் என நம்புவதாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் ஐசிசி கோப்பைக்கானத் தேடல் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதால் இந்தியா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதைப் போன்று இந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்று மீண்டும் ஒரு மகிழ்ச்சியான தருணத்தை இந்திய அணி உருவாக்கும் என நம்புவதாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது நான் பெங்களூருவில் இருந்தேன். நான் என்னுடைய சில நண்பர்களுடன் இணைந்து இறுதிப்போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்திய அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. நாங்கள் அனைவரும் ஆட்டம் முடிந்தது என நினைத்தோம். ஆனால், இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. அதன்பின் நாங்கள் பெங்களூருவில் கூட்டம் நிறைந்த இடத்துக்கு சென்றோம். அங்கு ஒவ்வொருவரும் இந்திய அணியின் வெற்றியை துள்ளிக் குதித்து கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இந்தியர்கள் நம் அனைவருக்கும் அது மிகுந்த பெருமை தரக்கூடிய தருணமாக அமைந்தது. மீண்டும் அத்தகைய மகிழ்ச்சியான தருணத்தை நாட்டு மக்களுக்காக உருவாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.