தென்னாப்பிரிக்க அணி இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயமாக கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களை தயார் செய்து வருகின்றன. உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளன. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைத்து அணிகளுக்கும் உள்ளது. குறிப்பாக, ஒரு முறை கூட உலகக் கோப்பையை வெல்லாத தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகமாகவே உள்ளது. அந்த அணி தற்போது நல்ல ஃபார்மில் இருந்து வருகிறது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று அசத்தியது தென்னாப்பிரிக்கா.
இதையும் படிக்க: மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தைவான் சகோதரிகள்!
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயமாக கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் முறையாக ஒரு விஷயத்தை சாதிக்கும்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். எங்களிடம் உலகக் கோப்பையை வெல்வதற்கான சமபலத்துடன் கூடிய அணி இருக்கிறது. நாங்கள் இந்திய ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவோம். வேகப் பந்துவீச்சு தென்னாப்பிரிக்க அணியின் மிகப் பெரிய பலம். அதனை இந்த உலகக் கோப்பையில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம். குறுகிய வடிவிலான உலகக் கோப்பை தொடர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்றாக இருந்ததில்லை. இந்த முறை இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது இருக்கும் தென்னாப்பிரிக்க அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது என்றார்.
இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கம்!
தென்னாப்பிரிக்க அணி வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.