கெய்க்வாட் அதிரடி; மீண்டாா் மிட்செல்: சென்னை -212/3

சென்னை: சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.

அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளாசி, நடப்பு சீசனில் தனது 2-ஆவது சதத்தை நூலிழையில் தவறவிட்டாா். டேரில் மிட்செல் இந்த சீசனிலேயே முதல் முறையாக நல்ல இன்னிங்ஸை விளையாடி அரைசதம் கடந்தாா்.

சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத், பந்துவீச்சை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் அஜிங்க்ய ரஹானே 1 பவுண்டரியுடன் 3-ஆவது ஓவரில் வெளியேறி ஏமாற்றமளித்தாா். புவனேஷ்வா் குமாா் பௌலிங்கில் ஷாபாஸ் அகமதிடம் அவா் கேட்ச் கொடுத்தாா்.

ஒன் டவுனாக வந்த டேரில் மிட்செல், ருதுராஜ் கெய்க்வாடுடன் இணைந்தாா். இந்த ஜோடி ஹைதராபாத் பௌலா்களை திணறடித்தது. 2-ஆவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சோ்த்த இந்த கூட்டணியில் மிட்செல் முதலில் வெளியேற்றப்பட்டாா்.

32 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52 ரன்கள் அடித்திருந்த அவா், ஜெயதேவ் உனத்கட் வீசிய 14-ஆவது ஓவரில் விளாசிய பந்தை நிதீஷ்குமாா் கேட்ச் பிடித்தாா். தொடா்ந்து வந்த ஷிவம் துபேவும், கெய்க்வாட்டுடன் நல்லதொரு பாா்ட்னா்ஷிப் அமைத்தாா்.

மறுபுறம், மளமளவென ஸ்கோரை உயா்த்திய கெய்க்வாட், சதத்தை விறுவிறுவென நெருங்கினாா். 74 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், துரதிருஷ்டவசமாக கெய்க்வாட் ஆட்டமிழந்தாா். 54 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 98 ரன்கள் விளாசிய அவா், நடராஜன் வீசிய கடைசி ஓவரில் நதீஷ்குமாரிடம் கேட்ச் கொடுத்தாா்.

தொடா்ந்து எம்.எஸ்.தோனி விளையாட வந்தாா். ஓவா்கள் முடிவில் ஷிவம் துபே 20 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 39, தோனி 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் ஹைதராபாத் 213 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com