
டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்கள் டெஸ்ட் வீரர்களாக உருவாகினால் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளைக் காண அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக், தில்லி பிரீமியர் லீக்கின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தில்லி பிரீமியர் லீக் அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இளைஞர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்துப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: டி20 போட்டிகளை நோக்கி இளைஞர்கள் கவரப்படுவதை நாம் குறைகூற முடியாது. டி20 போட்டிகள் அவர்களுக்கு பொருளாதார பயன்களை அளிக்கிறது. தற்போது இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஓவருக்கு 5 ரன்கள் என்ற ரன் ரேட்டில் ரன்கள் குவிக்கின்றனர். நாங்கள் டெஸ்ட் போட்டிகள் விளையாடும்போது, ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு 4 ரன்கள் எடுப்பார்கள்.
அதிரடியாக விளையாடினால் டெஸ்ட் போட்டிகளில் உங்களது அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். டெஸ்ட் போட்டியில் 270 பந்துகளில் 300 ரன்கள் குவித்தேன். இன்றைய இளைஞர்கள் அதே 270 பந்துகளில் 400 ரன்கள் குவிக்கக் கூட வாய்ப்புள்ளது. டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக உருவாகினால் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளைக் காண அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.