
ரஷித் கான் பந்துவீச்சில் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு பொல்லார்ட் ரசிகர்களை மிரளச் செய்தார்.
இங்கிலாந்தில் 100 பந்துகளைக் கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது. சௌதம்டன் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ்-சௌதர்ன் பிரேவ்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி மதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் பாட்டன் 30, அடம் லித் 16, கேப்டன் க்ரேகோரி 19 , ஜோ ரூட் 16, ரோவ்மன் போவல் 16, ரன்கள் எடுத்தனர்.
சௌதர்ன் பிரேவ்ஸ் அணியில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டான் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 127 ரன்களை வெற்றி இலக்காக களமிறங்கிய சௌதர்ன் பிரேவ்ஸ் அணியில் டேவிஸ், கேப்டன் ஜேம்ஸ் தொடக்கம் கண்டனர். இருவரும் சிறப்பான துவக்கம் அளித்த நிலையில் அலெக்ஸ் டேவிஸ் 28 (19), கேப்டன் ஜேம்ஸ் 28 (26) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நடுவரிசையில் களகண்ட வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற கைரன் பொல்லார்ட் 6வது இடத்தில் உள்ளே வந்தார். அவர் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடினார்.
கடைசி 20 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்ட போது ரஷித் கான் பந்து வீசினார். அந்த ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு பொல்லார்ட் மிரட்டினார். இருப்பினும் 23 பந்துகளில் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் சௌதர்ன் பிரேவ்ஸ் 99வது பந்திலேயே 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.