வினேஷ் போகத் 100 கிராம் எடையைக் குறைக்கத் தவறவிட்டது ஏன்? என அவரது தரப்பில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் வெளியாகியுள்ளன.
பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் தொடர்ந்துள்ள மனு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் வருகிற ஆக. 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில் வினேஷ் போகத் 100 கிராம் எடையைக் குறைக்க தவறவிட்டது ஏன்? என அவரது தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள காரணங்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் நடுவரான ஆஸ்திரேலியாவின் டாக்டர் அன்னாபெல் பென்னட் முன்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர்.
'கடந்த செவ்வாய்கிழமை ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ். அவர் ஒரேநாளில் மூன்று தொடர் போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் உலகின் நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை வென்றார். போட்டிக்கு முன் அவர் அனுமதிக்கப்பட்ட எடைக்குள்தான் இருந்தார். செவ்வாய்க்கிழமை இரவுக்குள் அவரது எடை கிட்டத்தட்ட மூன்று கிலோ அதிகரித்தது.
போட்டி நடைபெறும் இடத்திற்கும் வீராங்கனைகள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கும் இடைப்பட்ட தூரம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அவரது எடைக் குறைப்பிற்கான நேரம் கிடைக்கவில்லை. மேலும் ஒரேநாளில் 3 போட்டி காரணமாக சரியான எடையை வைத்திருக்க முடியவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துகொள்ள அவர் உணவு எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் ஒருவர் தொடர் போட்டிகளில் விளையாடுவதால் அவரது தசையின் எடை அதிகரிக்கும்.
வினேஷ் இறுதிப் போட்டிக்கு முன், இரவு முழுவதும் விழித்திருந்தார். உடல் எடையைக் குறைக்க ஓடுதல், ஸ்கிப்பிங் செய்தார். மேலும், முடியை வெட்டி ரத்தத்தை வெளியேற்றும் அளவிற்கு முயற்சி செய்தார். இருப்பினும் அவரது எடை 100 கிராம் அதிகரித்து இருந்தது.
100 கிராம் கூடுதல் எடை அவருக்கு எந்தவிதமான போட்டித் திறனையும் அளித்திருக்காது. இந்த அளவு மிகக் குறைவானது. இது தடகளத்தில் 0.1 முதல் 0.2 சதவிகிதம்தான்.
மேலும் கோடை காலத்தில் வெப்பநிலை காரணமாக தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கலாம். ஒரேநாளில் 3 போட்டிகளில் இருந்ததால் அவரது உடல் ஆரோக்கியத்திற்காக அவர் கூடுதல் தண்ணீர் எடுத்திருக்கலாம்.
எனவே எந்த ஒரு மோசடியிலும், பதக்கத்தைப் பெறுவதற்கு தவறான முயற்சியிலோ அவர் ஈடுபடவில்லை. கடின உழைப்பால் அவர் இந்த வெள்ளி பதக்கத்தைப் பெற்றுள்ளார். எனவே அவருக்கான வெள்ளி பதக்கத்தை வழங்க வேண்டும்' என்று தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.
இந்த வழக்கில் நாளை(ஆக. 13) மாலை சர்வதேச ஒலிம்பிக் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.