
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் தொடரை வென்று தாயகம் திரும்பியது. இந்த நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மிகுந்த போட்டியானதாக இருக்கப் போகிறது. கடந்த இரண்டு முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய சூழலில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த முறை இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. கடந்த இரண்டு முறையும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலேயே இரு அணிகளும் விளையாடின.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் அனைவரும் உற்சாகமாக இருக்கிறார்கள். இந்த டெஸ்ட் தொடரில் அதிக போட்டிகள் டிராவில் முடியாது என நினைக்கிறேன். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படப் போகிறது என்றுதான் கூறுவேன். மோசமான வானிலை காரணமாக ஒரு போட்டி டிராவில் முடிய வாய்ப்பிருக்கிறது. அதனால், ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் என்றார்.
இதற்கு முன்னதாக, இந்திய அணி கடந்த 1991-92 ஆம் ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.