ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிலிப்பின்ஸ் வீரர் கார்லோஸ் யூலோவுக்கு அந்நாட்டு அரசு ரூ.4.5 கோடி மதிப்புடைய சொகுசு வீட்டை பரிசாக வழங்கியது.
மேலும், அதில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை நினைவுகூரும் வகையில் தங்கப் பதக்கம் வடிவில் மேசைகளும், மின்னணு சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
2024 ஒலிம்பிக் தொடரில் ஃப்ரீஸ்டைல் ஜிம்னாஸ்டிக் மற்றும் ஆடவருக்கான போட்டி என இரண்டிலும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த கர்லோஸ் யூலோ இரு தங்கப் பதக்கங்களை வென்றார். தென்கிழக்கு ஆசியாவில், ஒலிம்பிக் போட்டியில் இரு தங்கப் பதக்கங்கள் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
பதக்கம் வென்றவர்களை பிலிப்பின்ஸ் அரசு பரிசுத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவித்துள்ளது.
அந்தவகையில் தங்கம் வென்ற கர்லோஸ் யூலோவுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையும், 32 மில்லியன் பெசோஸ் (பிலிப்பின்ஸ் ரூபாய்) மதிப்புடைய சொகுசு வீட்டையும் பரிசாக வழங்கியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.4.5 கோடி.
வீடு மட்டுமின்றி வீட்டிற்குத் தேவையான மேசைகள், மின்னணு இயந்திரங்கள் என அனைத்துப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டியை நினைவுபடுத்தும் வகையில் மேஜைகள் தங்கப் பதக்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தனக்கு பரிசாக வழங்கப்பட்ட வீட்டின் உள்புற புகைப்படங்களை யூலோ தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், பிலிப்பின்ஸில் உள்ள வைக்கிங் உணவு நிறுவனம் ஒன்று, தனது உணவகத்தில் யூலோவின் வாழ்நாள் முழுவதுக்குமான உணவுக் கட்டணம் (ஜப்பான் உணவு) இலவசம் என அறிவித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி மருத்துவ செலவு, மாலை நேர நொறுக்குத் தீனி செலவு என அனைத்தும் யூலோவுக்கு இலவசமாக அறிவித்து வருகின்றன தொழில் நிறுவனங்கள்.
பிலிப்பின்ஸின் பிரபல தேநீர் தயாரிப்பு நிறுவனமான டான் மெச்சிடேட்டர்ஸ், யூலோவின் பெயரில் இரு தேநீர் கடை கிளைகளைத் திறந்துள்ளது. அதன் வருவாயில் யூலோவுக்கும் பங்கு உண்டு.
பிலிப்பின்ஸைச் சேர்ந்த கார்லோஸ் யூலோ, ஜப்பானில் பயிற்சி பெற்றவர். பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு தங்கப் பதக்கங்களையும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 10 தங்கப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தவர்.