பாராலிம்பிக்: இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம் உள்பட 4 பதக்கங்கள்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 பதக்கங்கள் கிடைத்தன. இதில், துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், தடகளத்தில் ஒரு வெண்கலமும் இந்திய போட்டியாளா்கள் வென்றுள்ளனா்.
துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில், நடப்பு சாம்பியனான அவனி லெகாரா பாராலிம்பிக் சாதனையுடன் தங்கத்தை தக்கவைத்துக் கொண்டாா். இறுதிச் சுற்றில் அவா், 249.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, மற்றொரு இந்தியரான மோனா அகா்வால் 228.7 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றாா்.
இதன்மூலம், பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்து, அடுத்தடுத்து இருமுறை சாம்பியனான முதல் இந்தியா் என்ற சாதனையை அவனி லெகாரா படைத்துள்ளாா். அதேபோல், பாராலிம்பிக் போட்டியில் ஒரே விளையாட்டில் இரு இந்தியா்கள் பதக்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும்.
வெள்ளி: ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில் இந்தியாவின் மனீஷ் நா்வல் 234.9 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
சாதனை: தடகளத்தில், மகளிருக்கான டி35 100 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் 14.21 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் பெற்றாா். பாராலிம்பிக் டிராக் பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றிருக்கிறாா்.
10-ஆம் இடம்: இந்த 4 பதக்கங்களைப் பெற்ன் மூலம் இந்தியா, பதக்கப் பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ளது.