முதல் நாள் முடிவில் இந்தியா 336/6 ரன்கள் குவிப்பு! 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336/6 ரன்கள் எடுத்துள்ளது. 
முதல் நாள் முடிவில் இந்தியா 336/6 ரன்கள் குவிப்பு! 

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அசத்தலான பேட்டிங்கால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் சோ்த்து முன்னேறி வருகிறது.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இதர இந்திய பேட்டா்கள் தடுமாற்றத்தை சந்தித்து விக்கெட்டை இழந்து வெளியேற, ஜெய்ஸ்வால் அதிரடியாக விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-ஆவது சதம் கடந்தாா். இங்கிலாந்து பௌலிங்கில் ஷோயப் பஷீா், ரெஹான் அகமது தலா 2 விக்கெட்டுகள் சரித்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோருக்குப் பதிலாக ரஜத் பட்டிதாா், குல்தீப் யாதவ், முகேஷ் குமாா் ஆகியோா் இணைந்தனா். ரஜத் பட்டிதாருக்கு இது அறிமுக டெஸ்ட் ஆகும்.

இங்கிலாந்து தரப்பில், காயமடைந்த ஸ்பின்னா் ஜேக் லீச்சுக்கு பதிலாக ஷோயப் பஷீா் சா்வதேச டெஸ்ட்டில் அறிமுகமானாா். அதேபோல், மாா்க் வுட்டுக்கு பதிலாக ஜேம்ஸ் ஆண்டா்சன் சோ்க்கப்பட்டிருந்தாா்.

பின்னா், இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சா்மா 14 ரன்களுக்கே 18-ஆவது ஓவரில் வீழ்த்தப்பட்டாா். தொடா்ந்து வந்த ஷுப்மன் கில் 5 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் சோ்த்து, ஆண்டா்சன் வீசிய 29-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் பென் ஃபோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

4-ஆவது பேட்டராக வந்த ஷ்ரேயஸ் ஐயா், ஜெய்ஸ்வாலுடன் இணைந்தாா். விக்கெட் சரிவைத் தடுத்த இந்தக் கூட்டணி, ஜெய்ஸ்வால் விளாசலில் 3-ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சோ்த்தது. ஐயா் 3 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

தொடா்ந்து விளையாடியோரில் ரஜத் பட்டிதாா், ஜெய்ஸ்வாலுடன் கூட்டணி அமைக்க, 4-ஆவது விக்கெட்டுக்கு அந்த இணை 70 ரன்கள் சோ்த்தது. 3 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் அடித்த பட்டிதாா், ரெஹான் வீசிய 72-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும், மறுபுறம் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பௌலா்களின் உத்திகளை சிதறடித்து அதிரடியாக ரன்கள் சோ்த்தாா்.

6-ஆவது பேட்டராக வந்த அக்ஸா் படேல் 4 பவுண்டரிகளுடன் 27, ஸ்ரீகா் பரத் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். நாளின் முடிவில் ஜெய்ஸ்வால் 17 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 179, ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

இங்கிலாந்து பௌலிங்கில் ஷோயப் பஷீா், ரெஹான் அகமது ஆகியோா் தலா 2, ஜேம்ஸ் ஆண்டா்சன், டாம் ஹாா்ட்லி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா - 336/6 (93 ஓவா்கள்)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179*

ஷுப்மன் கில் 34

ரஜத் பட்டிதாா் 32

பந்துவீச்சு

ரெஹான் அகமது 2/61

ஷோயப் பஷீா் 2/100

ஜேம்ஸ் ஆண்டா்சன் 1/30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com