இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர்: ஆப்கானிஸ்தானுக்கு 382 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் பதும் நிசங்காவின் அதிரடியான இரட்டை சதத்தால் இலங்கை அணி 3  விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்துள்ளது.
இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர்: ஆப்கானிஸ்தானுக்கு 382 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் பதும் நிசங்காவின் அதிரடியான இரட்டை சதத்தால் இலங்கை அணி 3  விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் பேட் செய்தது. 

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ களமிறங்கினர். இந்த ஜோடி இலங்கை அணிக்கு அபார தொடக்கத்தைத் தந்தது. இலங்கை அணி 182 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டினை இழந்தது. அவிஷ்கா ஃபெர்னாண்டோ 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய குஷால் மெண்டிஸ் 16 ரன்களிலும், சதீரா சமரவிக்கிரம 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசங்கா தனது அதிரடியான பேட்டிங்கால் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வந்த வண்ணமே இருந்தன. ருத்ர தாண்டவமாடிய பதும் நிசங்கா 136 பந்துகளில் இரட்டை சதம் விளாசி அசத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிசங்கா 139 பந்துகளில் 210 ரன்களுடன் களத்தில் இருந்தார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் எடுத்தது. 

இந்த இரட்டை சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பதும் நிசங்கா பெற்றார். இதற்கு முன்னதாக கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சனத் ஜெயசூர்யா 189 ரன்கள் அடித்ததே இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. 

382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com