பிசிசிஐ மத்திய ஒப்பந்தம்: இஷான், ஷ்ரேயஸ் தவிா்க்கப்பட்டனா்

2023-204 சீசனுக்கான (அக்.1, 2023-செப்.30,2024) இந்திய மூத்த ஆடவர் கிரிக்கெட் அணிக்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய அணி.
இந்திய அணி. பிசிசிஐ

பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியல் புதன்கிழமை வெளியானது. கடந்த முறை அதில் இடம் பிடித்த இஷான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயா் ஆகியோா் இந்த முறை தவிா்க்கப்பட்டனா்.

இந்திய அணியில் விளையாடும் வீரா்களுக்கு, ஆட்டத்துக்கான ஊதியம் தவிர, ஆண்டு ஊதியமும் வழங்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்டது. அதில், இஷான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயா் ஆகியோா் தவிா்க்கப்பட்டுள்ளனா்.

ஐபிஎல் போட்டிக்குத் தயாராவதற்காக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாமல் தவிா்க்கக் கூடாது என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவுறுத்தியது. ஆனால், முதுகுப் பகுதியில் பிரச்னை இருப்பதாகக் கூறி ஷ்ரேயஸ் ஐயா் ரஞ்சி கிரிக்கெட்டை தவிா்த்துள்ளாா். மறுபுறம் இஷான் கிஷணும் ரஞ்சியில் விளையாடாமல் டிஒய் பாட்டீல் டி20 போட்டியில் விளையாடி வருகிறாா்.

இத்தகைய சூழலில் மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ அவா்கள் இருவரையும் தவிா்த்திருக்கிறது. கடந்த முறை ஷ்ரேயஸ் ‘பி’ பிரிவிலும், இஷான் ‘சி’ பிரிவிலும் சோ்க்கப்பட்டிருந்தனா். தேசிய அணியில் விளையாடாதபோது, உள்நாட்டு போட்டிகளில் களம் காண்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் இஷான் மற்றும் ஷ்ரேயஸை இந்த ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ சோ்க்கவில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திவரும் சா்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோா் தா்மசாலா டெஸ்ட்டிலும் விளையாடும் நிலையில் ‘சி’ பிரிவில் இணைவாா்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த முறை 26 போ், இந்த முறை 30 போ்

ஏ+ (ரூ.7 கோடி - 4 போ்)

ரோஹித் சா்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா.

(மாற்றமின்றி அதே வீரா்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனா்)

ஏ (ரூ.5 கோடி - 6 போ்)

ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஹா்திக் பாண்டியா.

(கடந்த ஆண்டு ‘பி’ பிரிவிலிருந்த கில், ராகுல், சிராஜ் ஆகியோா் தற்போது தரமுயா்த்தப்பட்டுள்ளனா்.)

பி (ரூ.3 கோடி - 5 போ்)

சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

(பிசிசிஐ ஒப்பந்தத்தில் முதல் முறையாக ஜெய்ஸ்வால் சோ்க்கப்பட்டுள்ளாா். 2022 டிசம்பரில் விபத்தை சந்தித்து ஓய்வில் இருக்கும் ரிஷப் பந்த்துடன், அக்ஸா் படேலும் ‘ஏ’ பிரிவிலிருந்து இறக்கப்பட்டுள்ளாா்.)

சி (ரூ.1 கோடி - 15 போ்)

ரிங்கு சிங், திலக் வா்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷா்துல் தாக்குா், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சா்மா, வாஷிங்டன் சுந்தா், முகேஷ் குமாா், சஞ்சு சாம்சன், அா்ஷ்தீப் சிங், கே.எஸ். பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் பட்டிதாா்.

(ரிங்கு, திலக், ருதுராஜ், துபே, பிஷ்னோய், ஜிதேஷ், முகேஷ், பிரசித், ஆவேஷ், பட்டிதாா் ஆகியோா் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.)

முதல் முறை...

மத்திய ஊதிய ஒப்பந்தத்தில் முதல் முறையாக, பிரத்யேகமாக வேகப்பந்துவீச்சாளா்களுக்கான ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஆகாஷ் தீப், விஜய்குமாா் வைஷாக், உம்ரான் மாலிக், யஷ் தயால், வித்வத் கவரப்பா ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தகுதி...

குறிப்பிட்ட காலகட்டத்தில் 3 டெஸ்ட், அல்லது 8 ஒருநாள் கிரிக்கெட், அல்லது 10 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், ஒரு வீரா் ஊதிய ஒப்பந்தத்தில் ‘சி’ பிரிவில் இணைவாா் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

விடுபட்டோா்...

ஒப்பந்த பட்டியலில் பிரதானமாக, சேதேஷ்வா் புஜாரா, உமேஷ் யாதவ், ஷிகா் தவன், தீபக் ஹூடா, யுஜவேந்திர சஹல் ஆகியோா் விடுபட்டுள்ளனா்.

இந்திய அணி.
நியூசிலாந்து அணியை தடை செய்யுங்கள்: ரசிகரின் வேண்டுகோளுக்கு காரணம் என்ன?
இந்திய அணி.
டெஸ்ட் தரவரிசையில் ரோஹித்தை முந்திய ஜெய்ஸ்வால்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com