ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது!

ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. 
Published on

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக வலம் வருகிறார். இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டு முறை இருந்துள்ளார். முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அணியின் இயக்குநராகவும், அதன்பிறகு தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 

ரவி சாஸ்திரியின் பதவிக்காலத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றியது. இருப்பினும், ரவி சாஸ்திரி - விராட் கோலி கூட்டணிக்கு ஐசிசி கோப்பை எட்டாக் கனியாகவே இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வி, 2021 ஆம் ஆண்டு டி20  உலகக் கோப்பையில் தோல்வி என ஐசிசி கோப்பைக்கான கனவு கனவாகவே தொடர்ந்தது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரியா விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி, இந்திய அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றார். 

இந்த நிலையில், ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஷுப்மன் கில்லுக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளது. ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2  ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை கடந்த ஆண்டில் அவர் படைத்தார். அதேபோல கடந்த ஓராண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் அவர் 5 சதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com