சோயிப் மாலிக் - சானியா மிர்சா பிரிவுக்கு இதுதான் காரணமா?

சோயிப் மாலிக் - சானியா மிர்சா பிரிவுக்கான காரணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சோயிப் மாலிக் - சானியா மிர்சா பிரிவுக்கு இதுதான் காரணமா?

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்  கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். சிறந்த தம்பதிகளாக வலம் வந்த இந்த ஜோடி தற்போது பிரிந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே சானியா - சோயிப்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், இது உண்மையில்லை என்பதுபோல் அவ்வபோது இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

ஆனால், நேற்று முன்தினம் (ஜன.20) சோயிப் மாலிக் நடிகை சனா ஜாவத்தைத் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், சோயிப் - சானியா இணை பிரிந்தது உறுதியானது. தொடர்ந்து, சானியா மிர்சாவின் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர். அதில், “சானியா மிர்சா தன் தனிப்பட்ட வாழ்க்கையை பொது கவனத்திற்கு வராமல் பார்த்துக்கொண்டவர். அவருக்கும் சோயிப்புக்கும் சில மாதங்களுக்கு முன் விவாகரத்தானது. சோயிப்பின் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு சானியா வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பல எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்துகொண்ட இந்த இணை ஏன்  பிரிந்தனர் என்கிற கேள்விக்கு தற்போது புதிய பதில் கிடைத்துள்ளது. 

சோயிப் மாலிக்தான் இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறார். காரணம், கடந்த 3 ஆண்டுகளாக நடிகை சனா ஜாவத்துக்கும் சோயிப்புக்கும் தொடர்பு இருந்ததாகவும் இதைத் தெரிந்துகொண்ட சானியா மிர்சா சோயிப் குடும்பத்தினருக்கு இந்த விசயத்தைக் கொண்டு சென்றிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சோயிப் குடும்பத்தினர் துபையில் வசித்து வந்த சானியா வீட்டிற்குச் சென்று இருவரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, சோயிப்பின் மூத்த சகோதரியின் கணவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்னையை சரிசெய்ய முயன்றிருக்கிறார். ஆனால், சோயிப் மாலிக் சனாவுடனான உறவைத் துண்டிக்காமல் இருந்தது சானியா மிர்சாவுக்கு மன உளைச்சலைத் தர, அவர் சோயிப்பை விட்டு விலகியிருக்கிறார். இந்தக் குழப்பங்களால் சோயிப் மாலிக் குடும்பத்தினர் அனைவரும் சானியா மிர்சாவுக்கு ஆதரவாக இருந்ததாகவே கூறுகின்றனர். ஆனால், ஒருகட்டத்தில் விவாகரத்து பெறுவதே நல்லது என  ‘குலா’ முறைப்படி சானியா, சோயிப்பை விவாகரத்து செய்துள்ளார். சோயிப் மாலிக் மறுமணத்தின்போது அவரின் குடும்பத்தினர் யாரும் அந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல். 

சோயிப் மாலிக் - சனா ஜாவத்!
சோயிப் மாலிக் - சனா ஜாவத்!

சோயிப் மாலிக் மறுமணம் செய்துகொண்ட நடிகை சனா ஜாவத்துக்கும் இது மறுமணம்தான். சனா கடந்த 2020 ஆம் ஆண்டு உமைர் ஜஸ்வால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இருவரும் கருத்து வேறுபாடால் 2023-ன் துவக்கத்தில் பிரிந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com