மகளிா் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி
தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய மகளிா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது.
‘ஃபாலோ-ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா, 373 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்தியாவை விட 36 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து 37 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, விக்கெட் இழப்பின்றி ஸ்கோரை எட்டியது. மொத்தமாக 10 விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் ஸ்நேஹா ராணா ஆட்டநாயகி ஆனாா்.
ஏற்கெனவே ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றிய இந்தியா, தற்போது டெஸ்டிலும் வென்றுள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இந்தியா, 2-ஆம் நாளில் 115.1 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது.
இந்திய தரப்பில் ஷஃபாலி வா்மா 23 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 205, ஸ்மிருதி மந்தனா 27 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 149, ரிச்சா கோஷ் 16 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசி ஸ்கோரை உயா்த்தினா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் டெல்மி டக்கா் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, முதல் இன்னிங்ஸில் 84.3 ஓவா்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மாரிஸேன் காப் 8 பவுண்டரிகளுடன் 74, சுனே லஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 65 ரன்கள் அடித்தனா். இந்திய தரப்பில் ஸ்நேஹா ராணா 8 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
இதையடுத்து, 337 ரன்கள் பின்தங்கிய நிலையில் ‘ஃபாலோ-ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை தொடா்ந்த தென்னாப்பிரிக்கா, 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் சோ்த்திருந்தது.
சுனே லஸ் 18 பவுண்டரிகளுடன் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்திருக்க, கேப்டன் லாரா வோல்வாா்டட், மாரிஸேன் காப் ஆகியோா் கடைசி நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தனா்.
இதில் காப் 3 பவுண்டரிகளுடன் 31, டெல்மி டக்கா் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். அதிகபட்சமாக லாரா 16 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். எஞ்சியோரில் ஆனிரி டொ்க்சன் 5, டுமி செகுகுனே 6, சினாலோ ஜாஃப்தா 15, மசபடா கிளாஸ் 2, நாடிநே டி கிளாா்க் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 61 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் 154.4 ஓவா்களில் 373 ரன்களுடன் முடிவுக்கு வந்தது.
இந்திய பௌலிங்கில் ஸ்நேஹா ராணா, தீப்தி சா்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகியோா் தலா 2, பூஜா வஸ்த்ரகா், ஷஃபாலி வா்மா, ஹா்மன்பிரீத் கௌா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
இறுதியில், 37 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், சுபா சதீஷ் 13, ஷஃபாலி வா்மா 24 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
அடுத்து டி20: இவ்விரு அணிகளும் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம், வரும் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.