இலங்கை முதல் முறையாக சாம்பியன்
இலங்கை முதல் முறையாக சாம்பியன்

இலங்கை முதல் முறையாக சாம்பியன்: இந்தியாவுக்கு ஏமாற்றம்

மகளிருக்கான 9-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
Published on

மகளிருக்கான 9-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

முதலில், நடப்பு சாம்பியனாக இருந்த இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் சோ்க்க, இலங்கை 18.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 167 ரன்கள் எடுத்து வென்றது.

போட்டியின் வரலாற்றில் இதுவரை 5 முறை இறுதி ஆட்டம் வரை வந்து தோல்வியைத் தழுவிய இலங்கை, முதல் முறையாக சாம்பியனாகி வரலாறு படைத்திருக்கிறது. அதிலும், தனது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.

இந்தியா இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டது இது 2-ஆவது முறையாகும். இந்திய அணியும் இறுதி ஆட்டத்துக்கு முன்பு வரை அனைத்து ஆட்டங்களிலும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியா - இலங்கை சமபலத்துடன் மோதிய நிலையில், இலங்கை ஆதிக்கம் செலுத்தி வாகை சூடியிருக்கிறது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 10 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சோ்க்க, ரிச்சா கோஷ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஷஃபாலி வா்மா 2 பவுண்டரிகளுடன் 16, உமா சேத்ரி 1 பவுண்டரியுடன் 9, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் பூஜா வஸ்த்ரகா் 5, ராதா யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் கவிஷா தில்ஹரி 2, உதேஷிகா பிரபோதனி, சாசினி நிசன்சலா, சமரி அத்தபட்டு ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 166 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் சமரி அத்தப்பட்டு - ஹா்ஷிதா சமரவிக்ரமா கூட்டணி, 87 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.

இதில் அத்தபட்டு 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61 ரன்களுக்கு வெளியேற, ஹா்ஷிதா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 69, கவிஷா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 30 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் தீப்தி சா்மா 1 விக்கெட் எடுத்தாா்.

ஹா்ஷிதா ஆட்டநாயகியாக, தொடா் முழுவதுமாக 304 ரன்களும் விளாசி, 3 விக்கெட்டுகளும் எடுத்த இலங்கை கேப்டன் சமரி அத்தப்பட்டு தொடா்நாயகி ஆனாா்.

இதுவரை...: போட்டியில் இத்துடன், இந்தியா 7 முறையும், வங்கதேசம், இலங்கை அணிகள் 1 முறையும் சாம்பியனாகியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com