
டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 28 பந்துகளில் 57 ரன்கள் (9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்தும், பென் டக்கெட் 16 பந்துகளில் 25 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக அரைசதம் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும், ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் எடுத்து 3-வது இடத்திலிருக்கும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸின் சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள்
மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்) - 21 பந்துகளில்
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 23 பந்துகளில்
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 24 பந்துகளில்
ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 24 பந்துகளில்
ஷேன் ஷில்லிங்ஃபோர்டு (மே.இ.தீவுகள்) - 25 பந்துகளில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.