
பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிப்பது குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படுவதில்லை என இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த நிலையில், பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிப்பது குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படுவதில்லை என இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தத் தொடர் முழுவதும் எனது பந்துவீச்சின் வேகம் மற்றும் பந்தை ரிலீஸ் செய்யும் விதம் ஆகியவற்றில் வித்தியாசமான முறைகளை முயற்சி செய்தேன். இந்தியா வித்தியாசமானது. இந்திய ஆடுகளங்கள் ஒவ்வொன்றிலும் சவால்கள் ஒவ்வொரு விதமாக இருக்கும். என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து நான் அதிகம் கவலைகொள்ளவில்லை.
நான் உறுதியாக இருந்தால் புதிய விஷயங்களை கண்டிப்பாக முயற்சி செய்வேன். நல்ல விதமான விமர்சனங்களுக்கு எனது காதினை திறந்தே வைத்திருக்கிறேன். புதிய விஷயங்களை முயற்சிக்காவிட்டால் என்னால் எதையும் கற்றுக் கொள்ளவே முடியாது. ஒரே விதமான முறையைப் பின்பற்றுவது பலனளிக்காது எனக் கூறவில்லை. புதிய விஷயங்களை முயற்சி செய்வது அதிர்ஷ்டவசமாக எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளது குறிப்பிடத்தக்கது.