14 மாதங்களுக்குப் பின்.. மீண்டும் கலக்க வரும் ரிஷப் பந்த்!

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தில்லி அணியின் கேப்டனான ரிஷப் பந்த் இன்றைய ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளார்.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்படம் | எக்ஸ் சமூக வலைதளம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வுக்குப் பின் அவருடைய இடத்தை நிரப்பப்போகும் வீரர் என்ற அடையாளத்துடன் இந்திய கிரிக்கெட் அணியில் வலம் வந்தவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்.

தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறத்த ரிஷப் பந்த், கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், சுமார் 14 மாதங்களுக்கு பின் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார் 26 வயதான இளம் வீரர் ரிஷப் பந்த்.

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில், தில்லியிலிருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கி நோக்கி காரை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையோரத் தடுப்பில் அவரது கார் மோதி தீப்பிடித்து எரிந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரிஷப் பந்த், படுகாயங்களுடன் காரிலிருந்து மீட்கப்பட்டு பல வாரங்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

விபத்தில் தீக்கிரையாகி உருக்குலைந்த நிலையில் உள்ள ரிஷப் பந்தின் கார்
விபத்தில் தீக்கிரையாகி உருக்குலைந்த நிலையில் உள்ள ரிஷப் பந்தின் கார்படம் | பிடிஐ

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப்-பந்தால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை திறம்பட வழிநடத்திய ரிஷப், கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் புத்துணர்ச்சியுடன் மீண்டு வந்துள்ளார் ரிஷப் பந்த்.

ஆம்.. மிக நீண்ட இடைவெளி, சுமார் 454 நாட்களுக்கு பின் மீண்டும் கையுறையை மாட்டிக்கொண்டு இன்றைய ஐபிஎல் போட்டியில் விக்கெட்கீப்பிங் செய்யப் போகிறார் ரிஷப் பந்த். மொகாலியில் இன்று(மார்ச். 23) மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான தில்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி.

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

இதனிடையே, தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் விடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது பதிவிட்டு, தான் உடல்நலம் தேறி வருவதை தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வந்த ரிஷப், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் அதிலிருந்து மெல்ல மீண்டு, 14 மாதங்களுக்கு பின் தற்போது கிரிக்கெட் விளையாடப் போவது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆவலுடன் இருப்பதாகவும், அதே சமயம், மனதில் சற்று நடுக்கம் ஏற்படுவதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ரிஷப். ”நான் நிறைய யோசிப்பதில்லை, போட்டியில் என்னை முழுமையாக வெளிப்படுத்துவேன்” என நம்பிக்கையுடன் பேசினார் ரிஷப் பந்த்.

ரிஷப் பந்த்
பதற்றமாக இருக்கிறது: 454 நாள்களுக்குப் பிறகு விளையாடும் ரிஷப் பந்த்!
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்தின் சிங்கிள் ஹேண்ட் ஷாட்டை இன்றைய போட்டியில் கண்டுகளிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், மீண்டும் கிரிக்கெட் மைதானத்துக்குள் அடியெடுத்து வைக்கும் தில்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com